நகைச்சுவை கலைஞர் நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி உச்ச நீதிமன்றத்தில் உத்தியோகபூர்வமாக தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். அவர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அரசாங்க சட்டத்தரணியால் இந்த வருத்தக் கடிதம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற "மோடாபிமானய" என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் போது பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, ஐக்கிய நாடுகளின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கை (ICCPR) சட்டத்தின் கீழ் கட்டநாயக்க விமான நிலையத்தில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டார். அதன்படி, 2023 மே 27 அன்று அவர் கைது செய்யப்பட்டு ஜூலை 05 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டமை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரி தனது கடிதத்தின் மூலம் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த செயல்முறை மூலம் அவரது நற்பெயருக்கு ஏதேனும் பாதிப்பு அல்லது மன உளைச்சல் ஏற்பட்டிருந்தால் அதற்கும் தான் வருந்துவதாக அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்காக மனுதாரரான நடாஷா எதிரிசூரிய மற்றும் பிரதிவாதியான முன்னாள் பொறுப்பதிகாரி எஸ்.எம்.யூ. சுபசிங்க ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது, பிரதிவாதி இவ்வாறு வருத்தம் தெரிவித்திருப்பதால், இந்த மனுவை சமரசம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்ததை தலைமை நீதிபதி பாராட்டினார். அதன்படி, சம்பந்தப்பட்ட அடிப்படை உரிமை மனுவின் விசாரணை நடவடிக்கைகளை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர உச்ச நீதிமன்றம் தீர்மானித்ததுடன், அவர் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னரே இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இதற்கிடையில், பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்ததாவது, ஐக்கிய நாடுகளின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கை சட்டத்தின் கீழ் தனிநபர்களைக் கைது செய்யும் போது ஏற்படக்கூடிய சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக, பொலிஸ் மா அதிபர் ஒரு விசேட வழிகாட்டுதல்களை வெளியிட தீர்மானித்துள்ளார். அந்த வழிகாட்டுதல்கள் அடுத்த இரண்டு நாட்களுக்குள் பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த நடாஷா ஊடகங்களிடம் இவ்வாறு கூறினார்.
"நான் தன்னிச்சையாகக் கைது செய்யப்பட்டேன். இன்று எனது பழைய வழக்கு (Case) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனித உரிமைகள் ஆணைக்குழுவால் எனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக வழங்கப்பட்ட பரிந்துரையும் அங்கு இருந்தது. சட்டமா அதிபர் திணைக்களம் ஒப்புக்கொண்டால் மற்றும் தற்போது பொலிஸாரால் கைது செய்யப்படும் நடைமுறையை மாற்ற விரும்பினால், நான் எனது மனுவை வாபஸ் பெற ஒப்புக்கொண்டேன். இது தொடர்பாக ஒரு சுற்றறிக்கை இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிடப்பட உள்ளது. அதோடு, என்னைக் கைது செய்த அதிகாரி தனது வருத்தத்தைத் தெரிவித்து எனக்கு எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக் கோரியுள்ளார்.
என் தரப்பில் நான் செய்ய விரும்பியது, நிதி இழப்பீடு பெறுவதை விட, எனக்கு நடந்த சம்பவம் வேறு யாருக்கும் நடக்காமல் இருக்க நான் என்ன செய்ய முடியும் என்பதைக் கண்டறிவதுதான். அதற்காக சட்டரீதியாக செய்யக்கூடிய அதிகபட்சத்தை நான் செய்ததாக நினைக்கிறேன். எனவே, சட்ட அமைப்பிற்குள் அதற்கு மேல் செய்ய எதுவும் இல்லை.
ஊடகங்கள் இதை எவ்வாறு பரப்பின மற்றும் அது தொடர்பான விஷயங்களுக்கு நான் அடுத்ததாக பதிலளிக்க (Counter press செய்ய) வேண்டியுள்ளது. அந்த நீதி எனக்கு கிடைக்க வேண்டிய ஒன்று என்று நான் நினைக்கிறேன். குறைந்தபட்சம் ஊடக நிறுவனங்கள் இதுபோன்ற சூழ்நிலைகளில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றிய ஒரு விவாதமும் எழ வேண்டும். "