ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (11) காலை நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதிக்கு அருகிலுள்ள தோட்டங்களில் பணிபுரியும் மக்களைச் சந்தித்து அவர்களுடன் சுமூகமாக உரையாடினார்.
அச்சந்தர்ப்பத்தில், தோட்டத் தொழிலாளர்கள் ஜனாதிபதியை மிகவும் அன்புடன் வரவேற்றதுடன், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தமது சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதிக்கு தமது விசேட பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மக்கள், சம்பள அதிகரிப்புடன் மட்டும் நின்றுவிடாமல், தோட்டத் தொழிலாளர்களின் உண்மையான பிரச்சினைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளை ஆராய்வதற்காக ஒரு தோட்டத்திற்கு வந்த வரலாற்றின் ஒரே அரச தலைவர் அநுர குமார திஸாநாயக்கவே என்று குறிப்பிட்டனர்.
இதற்கிடையில், 1750 ரூபா புதிய தினசரி சம்பளம் நேற்று கிடைத்ததையடுத்து, பகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களும் இன்று காலை கோவில்களுக்குச் சென்று விசேட மத வழிபாடுகளை மேற்கொண்டனர்.
அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் ஆசி வேண்டி நடத்தப்பட்ட அந்தப் பூஜைகளுக்குப் பின்னர், அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் மீண்டும் பணித்தளங்களுக்குத் திரும்பியுள்ளனர். எந்தவொரு வேலைநிறுத்தமோ அல்லது போராட்டமோ இன்றி வரலாற்றில் தாங்கள் பெற்ற மிக உயர்ந்த சம்பள அதிகரிப்பு இது என்றும் அவர்கள் நன்றியுடன் நினைவு கூர்ந்தனர்.