சரியாக சம்பளம் வழங்குமாறு பிரதி ஊடகத்துறை அமைச்சர் தனியார் ஊடக நிறுவனங்களிடம் கோரிக்கை விடுக்கிறார்

pay-salaries-properly---the-deputy-media-minister-asks-private-media-houses

தனியார் ஊடக நிறுவனங்களில் பணிபுரியும் ஊடகவியலாளர்கள் மற்றும் நிபுணர்களின் சம்பளம் உள்ளிட்ட தொழில்முறை உரிமைகள் மீறப்படுவது தொடர்பாக இதுவரை பல புகார்கள் கிடைத்துள்ளதாக வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சில ஊடக நிறுவனங்கள் மூடப்பட்டமை, துண்டு ஒப்பந்த அடிப்படையில் வேலைகள் வழங்கப்படுவதன் காரணமாக ஊடகவியலாளர்களுக்கு ஊழியர் சேமலாப நிதி (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) போன்ற சமூக பாதுகாப்பு நன்மைகள் இழக்கப்படுவதுடன், வழங்கப்படும் சேவைக்கு உரிய முறையில் சம்பளம் வழங்கப்படாமை ஆகிய காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் புகார்கள் அதிகமாக முன்வைக்கப்பட்டுள்ளன.




இந்தப் பிரச்சினைகள் இருந்தபோதிலும், தனியார் ஊடக நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களாக கம்பனிகள் சட்டத்தின் கீழ் இயங்குவதாலும், அவை தொழிலாளர் சட்டங்களுக்கு உட்பட்டு நிர்வகிக்கப்படுவதாலும், அந்த நிறுவனங்களின் ஊழியர்களின் வேலை மற்றும் சம்பளப் பிரச்சினைகள் தொடர்பாக வெகுஜன ஊடக அமைச்சுக்கு நேரடியாக தலையிடும் வாய்ப்பு குறைவு என பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார். எனவே பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தங்கள் உரிமைகளைப் பெறுவதற்கு தொழிலாளர் சட்டம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் விளக்கினார்.

எவ்வாறாயினும், ஊடகவியலாளர்கள் ஆற்றிவரும் சேவைக்கு மதிப்பளிக்கும் வகையிலும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புகார்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டும் அரசாங்கம் இது தொடர்பாக விசேட தலையீட்டை மேற்கொண்டுள்ளது. அதன்படி, அனைத்து தனியார் ஊடக நிறுவனங்களுக்கும் 2026 ஜனவரி 07 ஆம் திகதியிடப்பட்ட அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டார அவர்களால் விசேட கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊடகவியலாளர்களின் தொழில்முறை பாதுகாப்பை உறுதிப்படுத்தி, அவர்களின் சேவையைப் பாராட்டுமாறும், அதற்கான சம்பளங்கள் மற்றும் கொடுப்பனவுகளை உரிய முறையில் வழங்குமாறும் அரசாங்கம் இதன் மூலம் தனியார் ஊடக நிறுவன உரிமையாளர்களிடம் கோருகிறது.

Post a Comment

Previous Post Next Post