பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல ஆகியோருக்கு பாதாள உலக உறுப்பினர்களிடமிருந்து உயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அவிசாவளைப் பிரதேச பாதாள உலகம் மற்றும் தெற்குப் பிரதேச பாதாள உலகம் தொடர்பாக சில பாதாள உலக உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற உரையாடல் தொடர்பாக ஒரு புலனாய்வு அதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அது தொடர்பான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த புலனாய்வு அதிகாரி அது தொடர்பாக சீதாவக்க பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அறிவித்த பின்னர், பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்த பின்னர், அதன் விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பத்தரமுல்லை சுஹுருபாய பொலிஸ் ஊடகப் பிரிவில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான உதய குமார வூட்லர், அவிசாவளை பொலிஸ் பிரிவில் இருந்து கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
குற்றப் புலனாய்வு மற்றும் நிதி மோசடிப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்டவின் அறிவுறுத்தலின் பேரில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர உள்ளிட்ட அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.