இலங்கை மத்திய வங்கியினால் விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்களைத் தவிர, இந்நாட்டு குடியிருப்பாளர்களுக்கிடையில் மேற்கொள்ளப்படும் அனைத்து கொடுக்கல்வாங்கல்களும் இலங்கை ரூபாயில் மாத்திரமே கட்டாயமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என அதிகாரிகள் கடுமையாக வலியுறுத்தியுள்ளனர். இந்நாட்டிலுள்ள சில நபர்கள் தமது உள்நாட்டு கொடுக்கல்வாங்கல்களுக்கு வெளிநாட்டு நாணயத்தைப் பயன்படுத்துவதாக அண்மையில் அறிவிக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட நிலைமை காரணமாக மத்திய வங்கி இந்த உத்தியோகபூர்வ விளக்கத்தை வழங்கியுள்ளது.
மின்னணு அட்டைகள் மூலம் மேற்கொள்ளப்படும் கொடுப்பனவுகள் உட்பட, ரூபாயை வெளிநாட்டு நாணயமாக மாற்றி உள்நாட்டு கொடுப்பனவுகளை வெளிநாட்டு கணக்குகளுக்கு வரவு வைப்பதற்கு மத்திய வங்கி இதுவரை எந்த அனுமதியையும் வழங்கவில்லை என்றும் இங்கு மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான சட்டவிரோத நிதிச் செயற்பாடுகளில் ஈடுபடுவது 2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டம் மற்றும் 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டு நாணயச் சட்டம் ஆகிய சட்டக் கட்டமைப்புகளின் கீழ் கடுமையான சட்ட விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய குற்றமாகும். அதற்குரிய சட்ட நடவடிக்கைகளின் பின்னர், இக்குற்றங்கள் தொடர்பில் குற்றவாளிகளாகக் காணப்படும் நபர்களுக்கு 25 மில்லியன் ரூபாய்க்கு மேற்படாத அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரையிலான கடுமையான அல்லது இலகுவான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம், மேலும் சில சமயங்களில் நீதிமன்றத்தால் இந்த இரண்டு தண்டனைகளும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.