கெஹெல்பத்தரை பெயரைப் பயன்படுத்தி பணம் பறித்தவர் கைது

the-person-taking-money-using-the-name-of-kehelbaddara-was-arrested

போதைப்பொருள் கடத்தல்காரரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான, தற்போது பொலிஸ் காவலில் உள்ள "கெஹெல்பத்தார பத்மே" என்பவருடன் தொடர்புகள் வைத்திருப்பதாகக் கூறி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக நடித்து, மக்களை அச்சுறுத்தி பணம் பறித்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் நேற்று (18) பொரளை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.




போதைப்பொருள் கடத்தல்காரரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான, தற்போது பொலிஸ் காவலில் உள்ள "கெஹெல்பத்தார பத்மே" என்பவருடன் தொடர்புகள் வைத்திருப்பதாகக் கூறி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக நடித்து, மக்களை அச்சுறுத்தி பணம் பறித்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் நேற்று (18) பொரளை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது கொழும்பு தெற்குப் பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ரத்மலானை, அங்குலான பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவராவார். பொலிஸ் விசாரணைகளில், இவர் தினமும் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாயை தனது கணக்கில் வரவு வைத்துக்கொள்வதாகவும், தினமும் சுமார் 75,000 ரூபாய் மதிப்புள்ள ஹெரோயினை உட்கொள்வதாகவும் தெரியவந்துள்ளது.




சந்தேகநபர் சிறந்த பேச்சாற்றல் கொண்டவர் என்றும், சிறையில் இருந்த காலத்திலும் பல்வேறு நபர்களை அச்சுறுத்தி கணக்குகளில் பணம் வரவு வைத்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவருக்கு எதிராக சுமார் 15 கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சுமார் 20 வயதில் முதல் முறையாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவர் சுமார் 17 ஆண்டுகள் பூஸ்ஸா அதி பாதுகாப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டு, சில நாட்களுக்கு முன்பு விடுவிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், பூஸ்ஸா அதி பாதுகாப்பு சிறைக்கு அனுப்பப்படுவதற்கு முன்னர், சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேறு இரண்டு சிறைகளில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மீண்டும் கைது செய்யப்பட்ட பின்னரே அவர் பூஸ்ஸா அதி பாதுகாப்பு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.



இவர் அச்சுறுத்திப் பெற்ற பணம் திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நபரை சந்தேகநபர் சிறையில் சந்தித்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். அந்தப் பணம் "ஈசி கேஷ்" முறை மூலம் சந்தேகநபருக்குக் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டபோது, சந்தேகநபரிடமிருந்து ஒரு ஸ்மார்ட் வகை கையடக்கத் தொலைபேசி, மூன்று தொலைபேசி சிம் அட்டைகள் மற்றும் 3 கிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post