குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரின் பெயரையும் பதவியையும் போலியாகப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட மின்னஞ்சல் (Email) ஒன்று இந்த நாட்களில் பொதுமக்கள் மத்தியில் பரவி வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு கண்டறிந்துள்ளது. குறிப்பாக, "ஷானி அபேசேகர, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் (CID)" என்ற பெயரையும் உத்தியோகபூர்வ பதவியையும், அத்துடன் "NationWide Could, Protection 24/7" போன்ற சொற்களையும் பயன்படுத்தி இந்த போலிச் செய்திகள் ஒரு தனிநபரால் அல்லது குழுவால் சமூகமயமாக்கப்பட்டு வருவதாக அவதானிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட குற்றப் புலனாய்வுத் திணைக்களம், சம்பந்தப்பட்ட மின்னஞ்சல் செய்திகள் தமது திணைக்களத்தால் அனுப்பப்பட்டவை அல்ல என்பதை வலியுறுத்தியுள்ளது. தற்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, noucinatacha20@gmail.com மற்றும் police.cid.lk@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்தி இந்த மோசடிச் செய்திகள் அனுப்பப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களை ஏமாற்றி பண மோசடி செய்யும் அல்லது இரகசிய தனிப்பட்ட தகவல்களைப் பெறும் நோக்குடன் இந்த மோசடிச் செயல் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்த போலிச் செய்திகளை அனுப்பிய தனிநபர்கள் அல்லது குழுக்கள் பற்றிய தகவல்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஏற்கனவே ஒரு விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளது.
எனவே, மேலே குறிப்பிடப்பட்ட சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல் முகவரிகள் மூலம் பெறப்படும் செய்திகளின் உள்ளடக்கத்தை நம்ப வேண்டாம் என்றும், அதற்கு பதிலளிப்பதையோ அல்லது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதையோ தவிர்க்குமாறும் பொலிஸார் பொதுமக்களுக்கு கடுமையாக எச்சரிக்கின்றனர்.