வழக்கு பொருட்களை திருடிய ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது குற்றச்சாட்டுகள்

allegations-against-retired-police-officers

பொரளை பொலிஸ் நிலையத்தில் உள்ள வழக்குப்பொருள் அறையில் இருந்து ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான வழக்குப்பொருட்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில், அண்மையில் ஓய்வுபெற்ற பொலிஸ் பரிசோதகர் ஒருவரும், உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் கொழும்பு தெற்குப் பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னர், அதாவது 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில், குறித்த வழக்குப்பொருள் அறைக்கு பொறுப்பாக இருந்த இரு அதிகாரிகள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.




காணாமல் போன பொருட்களில் ஆறு இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம், உளவு முகவர்களைப் பயன்படுத்திய பணம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபானப் போத்தல்கள் மற்றும் சில சைக்கிள்கள் என்பனவும் அடங்குவதாக பொலிஸ் வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. இந்த மோசடி குறித்த விசாரணைகள் 2023 டிசம்பர் 15 ஆம் திகதி பொலிஸ் மா அதிபரால் வெளியிடப்பட்ட விசேட செய்தி மற்றும் கணக்காய்வு முகாமைத்துவக் குழுவின் அறிவித்தலின் பேரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கொழும்பு தெற்குப் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஷன் சூரிய பண்டாரவின் உத்தரவின் பேரில், கொழும்பு தெற்குப் பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் நெவில் பிரியந்த தலைமையிலான குழுவினர் இந்த கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசாரணைகளில், காணாமல் போன மொத்த 57 வழக்குப்பொருட்களில் 47 பொருட்களுக்கு இந்த ஓய்வுபெற்ற இரு அதிகாரிகளும் நேரடியாகப் பொறுப்பு என்பது தெரியவந்துள்ளது. நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதாகக் கூறி குறித்த வழக்குப்பொருட்களை எடுத்துச் சென்று தங்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வைத்திருந்தமை மற்றும் பொலிஸ் ஆவணங்களில் முறையாகப் பதிவு செய்யாதமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. அத்துடன், குறித்த காலப்பகுதியில் வழக்குப்பொருள் அறைக்கு பொறுப்பாக இருந்த மேலும் எட்டு பொலிஸ் அதிகாரிகளுக்கும் எதிராக தற்போது விரிவான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.




இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் 63 மற்றும் 64 வயதுடையவர்கள் ஆவர். இவர்கள் மேல் இம்புல்கொட மற்றும் அம்பாறை ஹிங்குரான ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். கைது செய்யப்பட்ட இந்த ஓய்வுபெற்ற இரு பொலிஸ் அதிகாரிகளும் விரைவில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post