
அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆதாடோல பிரதேசத்தில் பொலிஸ் உத்தரவை மீறிச் சென்ற லொரி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி இரு சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று 2026.02.09 அதிகாலை பதிவாகியுள்ளது.
அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தின் தந்திரோபாய மோட்டார் சைக்கிள் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று அம்பலாங்கொடை நோக்கிச் சென்ற சந்தேகத்திற்கிடமான லொரியை பரிசோதனைக்காக நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர்.எவ்வாறாயினும், லொரி பொலிஸ் உத்தரவை மீறி நிற்காமல் தொடர்ந்து முன்னோக்கிச் சென்றதுடன், அதிகாரிகள் அதைப் பின்தொடர்ந்து நிறுத்த முயன்றனர். லொரி மேலும் தப்பிச் செல்ல முயன்றபோது, வத்துவா பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகள் லொரி மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அதனை நிறுத்த முடிந்தது.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், லொரியில் 10 மாடுகளும் 04 எருமைகளும் இருந்தமை தெரியவந்துள்ளது. ஒரு மாட்டின் கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சுற்றிவளைப்பின் போது லொரியில் இருந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து 5200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 42 மற்றும் 46 வயதுடைய அக்குரஸ்ஸ மற்றும் பேருவளை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், லொரியின் சாரதியும் மற்றுமொரு சந்தேகநபரும் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.