2026 ஆண்கள் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் எட்டு சுற்று ஆரம்பமாகவுள்ள நிலையில், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள முதல் போட்டிக்கு மழை குறுக்கிட்டுள்ளது. கொழும்பு ஆர்.
பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் நாணய சுழற்சியில் பாகிஸ்தான் அணியின் தலைவர் சல்மான் அகா வெற்றி பெற்றார், அவர் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.இருப்பினும், போட்டி தொடங்குவதற்கு முன்பே மைதானத்தில் பெய்த மழையின் காரணமாக ஆடுகளத்தையும் மைதானத்தையும் முழுமையாக மூடுவதற்கு ஊழியர்கள் நிர்பந்திக்கப்பட்டனர், இதனால் போட்டி குறித்த நேரத்தில் ஆரம்பிப்பது தாமதமானது. நாணய சுழற்சி மழை தொடங்குவதற்கு முன் நடத்தப்பட்டது, அப்போது கருத்து தெரிவித்த பாகிஸ்தான் தலைவர் குறிப்பிடுகையில், தனது அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டு, குவாஜா நஃபேவுக்கு பதிலாக ஃபகார் சமான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றார். மேலும், நியூசிலாந்து ஒரு வலுவான அணி என்பதால், தனது அணி சிறந்த திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நியூசிலாந்து அணியின் தலைவர் மிட்செல் சான்ட்னர் நாணய சுழற்சியின் போது கலந்துகொண்டு, தங்கள் அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். அதன்படி, ஜேக்கப் டஃபி மற்றும் கைல் ஜேமிசன் ஆகியோருக்கு பதிலாக, கூடுதல் சுழற்பந்து வீச்சாளராக இஷ் சோதி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் லோக்கி பெர்குசன் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்களிடமிருந்து வரக்கூடிய சவால்களை தாம் நன்கு அறிவதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.
இந்தத் தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு மட்டுமே மேலதிக நாட்கள் (reserve days) ஒதுக்கப்பட்டுள்ளதால், இன்றைய தினம் மழை காரணமாக போட்டி முழுமையாக கைவிடப்பட்டால், இரு அணிகளுக்கும் இடையே புள்ளிகள் சமமாகப் பகிரப்படும். முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ரமீஸ் ராஜா மற்றும் ஆரோன் பின்ச் ஆகியோர் ஆடுகளத்தை ஆய்வு செய்த பின்னர் தெரிவித்ததாவது, அதில் லேசான ஈரப்பதம் இருப்பதால், நாணய சுழற்சியில் வென்ற அணி முதலில் களத்தடுப்பு செய்வது மிகவும் பொருத்தமான முடிவாக இருந்திருக்கலாம்.