நெலுவ மற்றும் தெரணியகல பிரதேசங்களில் இருந்து இரண்டு கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த இரண்டு கொலைகளும் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்றுள்ளதுடன், குடும்ப தகராறுகள் மற்றும் தனிப்பட்ட மோதல்களே இதற்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த 20ஆம் திகதி அதிகாலை நெலுவ, ஹப்பிட்டிய பிரதேசத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக நெலுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 32 வயதுடைய பெண் ஒருவரின் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குடும்பத் தகராறு முற்றியதால் உயிரிழந்த பெண்ணின் கணவரே இந்தக் கொலையைச் செய்துள்ளார் என ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சுமார் 34 வயதுடைய சந்தேகநபரான கணவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், நெலுவ பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கடந்த 20ஆம் திகதி மாலை தெரணியகல, உடமாலிபொட பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரணியகல பொலிஸார் தெரிவிக்கின்றனர். மாலிபொட பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவருக்கும் அவரது மாமனாருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு முற்றியதால், மாமனாரே கூரிய ஆயுதத்தால் தாக்கி இந்தக் கொலையைச் செய்துள்ளார் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொலையைச் செய்த சந்தேகநபரை கைதுசெய்வதற்காக தெரணியகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.