லஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு அமைய, எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி இன்று (27) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த சட்ட நடவடிக்கை, அமைச்சர் இதற்கு முன்னர் அரச அதிகாரியாக கடமையாற்றிய காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.
அதன்படி, 2014 ஆம் ஆண்டில் அவர் அரச சேவையில் இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட ஒரு கொள்முதல் நடவடிக்கை தொடர்பான ஒரு பிரச்சினை குறித்து இவ்வாறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.இலங்கை உர நிறுவனத்தின் கொள்முதல் முகாமையாளராக கடமையாற்றிய காலத்தில், அரசுக்கு 8.8 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்ய, எதிர்வரும் மார்ச் 27 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருந்தது.
குமார ஜயக்கொடி இலங்கை உர நிறுவனத்தின் கொள்முதல் முகாமையாளராகப் பணியாற்றிய காலத்தில், அந்த நிறுவன வளாகத்தில் ஒரு அபிவிருத்தித் திட்டத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரு தனியார் நிறுவனத்திற்கு முறையற்ற நிதி ஆதாயத்தை வழங்குவதன் மூலம் அரசுக்கு 8,800,000 ரூபாய்க்கும் (8.8 மில்லியன்) அதிகமான இழப்பை ஏற்படுத்தியமை தொடர்பாக இந்த குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது, கொள்முதல் விதிமுறைகளின்படி, சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் ஒரு வங்கி உத்தரவாதத்தை சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால், அத்தகைய உத்தரவாதம் இல்லாமல், திட்ட மதிப்பில் 20% தொகையை (8.8 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகை) முன்கூட்டியே விடுவிக்க அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், கடந்த 17 ஆம் திகதி நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து வினவினார். அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, சம்பந்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு குமார ஜயக்கொடி அமைச்சர் பதவியில் இருக்கும் தற்போதைய காலகட்டத்தில் நடந்திருந்தால், நிச்சயமாக அவரை அந்த அமைச்சர் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வலியுறுத்தினார்.