கொழும்பு துறைமுக நகரத்தை மையமாகக் கொண்டு நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட புதிய வணிக முதலீடுகள் வெற்றிகரமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார். கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் உள்ள கட்டளைகளை அங்கீகரிப்பது மற்றும் தற்போதைய உலகளாவிய நிலைமை குறித்து நேற்று (19) பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அதன்படி, 6.3 மில்லியன் சதுர மீட்டர் பரப்பளவை உள்ளடக்கிய பாரிய வெளிநாட்டு முதலீடுகளை நாட்டிற்கு கொண்டு வருவது தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.கடந்த காலத்தில் நிலவிய சில பிரச்சினைகள் காரணமாக இந்த துறைமுக நகர திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டாலும், கடந்த காலத்தில் மூன்று முதலீட்டு திட்டங்களை மட்டுமே ஈர்க்க முடிந்தது என்றும், அவற்றில் ஒன்று பாதியிலேயே நிறுத்தப்பட்டது என்றும் ஹந்துன்னெத்தி நினைவுபடுத்தினார். இருப்பினும், தற்போதைய அரசாங்கம் தலையிட்டு நிறுத்தப்பட்ட கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளது. சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளிலிருந்து முதலீட்டாளர்களை ஈர்க்க முடியாமல் போனதற்கு, அப்போதைய குடும்ப மற்றும் கூட்டு ஆட்சி முறைகளில் வேரூன்றியிருந்த ஊழல் மற்றும் கமிஷன் பணத்தை எதிர்பார்த்த கலாச்சாரமே காரணம் என்று அமைச்சர் வலியுறுத்தினார். தற்போது, அந்த ஊழல் நடைமுறைகள் முழுமையாக அகற்றப்பட்டு, எந்தவித முறைகேடுகளும் இன்றி பாரபட்சமற்ற மற்றும் நியாயமான முறையில் செயல்பட புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு தற்போதைய அரசாங்கத்தின் அரசியல் ஸ்திரத்தன்மை ஒரு முக்கிய காரணியாக அமைந்துள்ளதுடன், ஜனாதிபதியின் தலைமையில் ஒரு உயர் பொருளாதார முகாமைத்துவக் குழுவும் இதற்காக நிறுவப்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீடுகளுக்கு நேரடியாக அமைச்சரவை ஒப்புதலைப் பெறுவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்துள்ளதுடன், முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் தாமதங்களைக் குறைப்பதற்கும் விசேட கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, சுமார் இருபத்தாறு நிறுவனங்களிடமிருந்து ஒப்புதல் பெறுவதில் ஏற்படும் கால விரயத்தைத் தவிர்த்து, ஆறு வாரங்கள் போன்ற குறுகிய காலத்திற்குள் ஒரே கூரையின் கீழ் அனைத்து ஒப்புதல்களையும் வழங்கும் விரைவான திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது.
உலகளாவிய ரீதியில் நிலவும் நெருக்கடியான மற்றும் போர்ச் சூழ்நிலைகள் இருந்தபோதிலும், இலங்கையின் பொருளாதாரம் மற்றும் விநியோகச் சங்கிலிகளில் எந்தவிதமான தடங்கலும் ஏற்படவில்லை என்று கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி சுட்டிக்காட்டினார். மீன்பிடித் தொழில் உட்பட அத்தியாவசிய சேவைகள் தொடர்ச்சியாகப் பேணப்படுவதுடன், ஆயிரத்து முன்னூறு தொழிற்சாலைகளுக்குத் தேவையான எரிபொருள் வசதிகளை எந்தவித தட்டுப்பாடும் இன்றி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டில் நிறுவப்பட்டுள்ள இந்த வலுவான அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை காரணமாக உலகளாவிய தொழில்முனைவோர் இலங்கை மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதாகவும், இது நாட்டின் பாரிய பொருளாதார மாற்றத்தின் ஆரம்பத்தைக் குறிப்பதாகவும் சுனில் ஹந்துன்னெத்தி மேலும் தெரிவித்தார்.