சட்டவிரோத வீசா அனுமதிப்பத்திரங்கள் இன்றி நாட்டில் தங்கியிருந்து அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலை பிரதேசங்களில் உள்ள ஐந்து ஆடம்பர ஹோட்டல்களில் தங்கியிருந்த 134 வெளிநாட்டவர்கள் கடந்த 16ஆம் திகதி குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 124 சீன பிரஜைகள், 6 மியன்மார் பிரஜைகள் மற்றும் 4 தாய்வான் பிரஜைகள் அடங்குவதுடன், இக்குழுவில் பெண்களும் அடங்குவர்.
அரச புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த விசேட தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குறித்த நபர்கள் அனுராதபுரம் நகர எல்லைக்குட்பட்ட நான்கு ஹோட்டல்களிலும், மிஹிந்தலை நகரிலுள்ள ஒரு ஹோட்டலிலும் பல மாதங்களாக சட்டவிரோதமாகத் தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது. குறித்த ஹோட்டல் உரிமையாளர்கள் வெளிநபர்கள் அந்த வளாகங்களுக்குள் நுழைவதற்கு முழுமையாகத் தடை விதித்திருந்ததாகவும், இந்த வெளிநாட்டவர்கள் மட்டுமே அந்த வளாகங்களுக்குள் கணினிகளைப் பயன்படுத்தி சில நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.
அவர்களின் இந்த சந்தேகத்திற்கிடமான நடத்தை முறையின்படி, இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குழு ஏதேனும் சட்டவிரோத நிதி மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என புலனாய்வுப் பிரிவினர் கடுமையாக சந்தேகிக்கின்றனர். சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டபோது, அவர்கள் பயன்படுத்திய மூன்று மோட்டார் வாகனங்களும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றில் ஒரு வாகனம் சிலாபம் பிரதேச முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைது செய்யப்பட்ட அனைத்து வெளிநாட்டவர்களையும் இரண்டு பேருந்துகள் மூலம் கொழும்புக்கு அழைத்து வர அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் மேலதிக விசாரணைகளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தற்போது மேற்கொண்டு வருகிறது.