பிரதமர் ஹரினி அமரசூரிய அம்மையாரின் தலைமையில் கடந்த மார்ச் 15ஆம் திகதி தங்கல்ல நகர மண்டபத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் கலந்துகொள்ளாத ஆசிரியர்கள் தொடர்பில் தகவல்களைத் தெரிவித்து அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு தங்கல்ல வலயக் கல்வி அலுவலகம் வலயத்திலுள்ள அனைத்துப் பாடசாலை அதிபர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
வலயக் கல்விப் பணிப்பாளர் டபிள்யூ. ஏ. எஸ். டி. கல்யாணி அம்மையாரால் திங்கட்கிழமை (23) வெளியிடப்பட்ட சுற்றறிக்கை மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தங்கல்ல கல்வி வலய ஆசிரியர்களுக்காக குறித்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும், அதில் கலந்துகொள்பவர்களின் விபரங்களை வலய அலுவலகம் இதற்கு முன்னர் ஒரு சந்தர்ப்பத்திலும் கோரியிருந்ததாகவும் அந்த அறிவிப்பு மூலம் அதிபர்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த கூட்டத்தில் தமது பாடசாலையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொள்ளாத ஆசிரியர்களின் வருகையின்மைக்கான காரணங்களை விளக்கி, நாளை (மார்ச் 26) தினத்திற்கு முன்னர் அத்தகவல்களை வலயக் கல்வி அலுவலகத்திற்கு சமர்ப்பிப்பது அதிபர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள ஒரு கடமையாகும்.
இந்தத் தகவல்கள் உத்தியோகபூர்வ தேவைக்காக அவசரமாகத் தேவைப்படுவதால், குறித்த அறிக்கைகளை எவ்வித தாமதமுமின்றி அனுப்ப வேண்டும் என வலயக் கல்விப் பணிப்பாளர் தனது சுற்றறிக்கை மூலம் மேலும் வலியுறுத்தியுள்ளார்.