முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பதவிக்காலத்தில் சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட மருந்து மற்றும் மருத்துவ உபகரண கொள்வனவு செயல்முறை தொடர்பில் அரசாங்கத்தின் கணக்காய்வாளர் நாயகத்தினால் விசேட தடயவியல் கணக்காய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் நேற்று (30) உயர் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தினார்.
குறித்த காலப்பகுதியில் கொள்வனவு விதிகளை மீறி மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பொருட்கள் கொள்வனவுகள் மூலம் பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி 'ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீ லங்கா' அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு பரிசீலிக்கப்பட்ட போதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நிர்மலன் விக்னேஸ்வரன் இந்த விடயங்களை நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகளான ப்ரீதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோரைக் கொண்ட மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு தனது மனுவில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட சுகாதார அமைச்சின் பல அதிகாரிகளை பிரதிவாதிகளாக பெயரிட்டுள்ளது.
வழக்கு அழைக்கப்பட்டபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி சேனாணி தயாரத்ன, மனுவை தொடர ஏற்கனவே அனுமதி கிடைத்துள்ளதால், அதை விசாரணைக்கு எடுக்க ஒரு குறிப்பிட்ட திகதியை வழங்குமாறு நீதிமன்றத்தை கோரினார். அதற்கு பதிலளித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், சர்ச்சைக்குரிய காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 600க்கும் மேற்பட்ட மருத்துவப் பொருட்கள் கொள்வனவுகள் தற்போது கணக்காய்வாளர் நாயகத்தின் தடயவியல் கணக்காய்வு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக விளக்கமளித்தார். மேலும், இந்த சம்பவங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் தனியான சுயாதீன விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் அவர் நீதிமன்றத்திற்கு மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில், பிரதிவாதி ஒருவரை பிரதிநிதித்துவப்படுத்திய சட்டத்தரணி சுரேஷ் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் சமர்ப்பித்த விடயத்தில், தான் முன்னர் தாக்கல் செய்த ஒரு மோஷன் தொடர்பில் ஒரு நீதிபதியால் சட்டத்திற்கு முரணான வகையில் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் பரிசீலித்த பின்னர், பிரதிவாதி தரப்பால் தாக்கல் செய்யப்பட்ட மோஷன்கள் தொடர்பான விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக மனுவை அடுத்த மே மாதம் 20 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.