நேற்று (24) பிற்பகல் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் இடையில் விசேட தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் போர்ச் சூழல் மற்றும் அதன் மூலம் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான தாக்கம் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, இந்த அமைதியற்ற நிலைமை காரணமாக உலக எரிசக்தி விநியோகத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து மற்றும் பாதகமான தாக்கங்கள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் விசேட கவனம் செலுத்தினர்.
இந்த நெருக்கடியான சூழ்நிலையில், இரு நாடுகளின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதன் அவசியம் இங்கு கடுமையாக வலியுறுத்தப்பட்டது. மேலும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையையும் பாதுகாப்பையும் பேணுவதற்காக இணைந்து செயல்பட இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளைத் தடையின்றி நடத்துவதற்கு அத்தியாவசியமான காரணியான கடல்வழிப் பாதைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் அவற்றை திறந்து வைத்தல் உள்ளிட்ட கப்பல் போக்குவரத்துத் துறையின் முக்கியத்துவம் குறித்தும் இந்தத் தொலைபேசி உரையாடலில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இலங்கை ஜனாதிபதியுடன் நடைபெற்ற இந்தத் தொலைபேசி உரையாடல் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது உத்தியோகபூர்வ முகநூல் கணக்கில் ஒரு பதிவை இட்டு, மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் நெருக்கடி மற்றும் உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பிற்கு அதனால் ஏற்படும் தடைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் இந்திய-இலங்கை எரிசக்தி ஒத்துழைப்பை வளர்ப்பதற்காக செயல்படுத்தப்பட்டுள்ள முக்கிய முன்முயற்சிகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் அப்போது மீளாய்வு செய்யப்பட்டதாகப் பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், ஒருவருக்கொருவர் நம்பிக்கையுள்ள நெருங்கிய பங்காளிகளாக, பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் கூட்டாகச் செயல்படுவதற்கான தனது உறுதிப்பாட்டை இந்த கலந்துரையாடல் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தியதாகவும் இந்தியப் பிரதமர் தனது சமூக ஊடகப் பதிவில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.