மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்துள்ள யுத்த சூழ்நிலை காரணமாக, இந்த நாட்களில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்த பகுதிகளில் கடுமையான கப்பல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஈரானால் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதைத் தொடர்ந்து, துபாய் துறைமுகத்திற்குச் செல்லவிருந்த பல கப்பல்கள் தங்கள் இலக்கை மாற்றி, பொருட்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட சொகுசு மோட்டார் வாகனங்களை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இறக்கியது இதற்கு முக்கிய காரணமாகும்.
இந்தக் காரணத்தினால், கடந்த இரண்டு வாரங்களாக துறைமுக வளாகத்தில் பெரும் நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், ரோல்ஸ் ராய்ஸ், லம்போர்கினி மற்றும் ஃபெராரி போன்ற உலகின் மிகவும் விலையுயர்ந்த சொகுசு வாகனங்கள் பலவும் இவ்வாறு இறக்கப்பட்ட பொருட்களில் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நெரிசலின் நேரடி விளைவாக, சுமார் ஐநூறு வாகனங்களுடன் இலங்கைக்கு வந்த ஜப்பானின் கோபே மோட்டார்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான கப்பல், சுமார் பத்து நாட்களாக துறைமுகத்திற்குள் நுழைய முடியாமல் கடலில் நங்கூரமிட்டு நிற்க வேண்டியிருந்தது. ஆண்டுதோறும் சுமார் பதினெட்டாயிரம் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை ஏற்றுமதி செய்யும், மற்றும் இலங்கையை தனது முக்கிய வாடிக்கையாளராகக் கருதும் இந்த நிறுவனத்திற்குச் சொந்தமான துபாய்க்கு அனுப்பப்படவிருந்த சுமார் ஐம்பது சொகுசு மோட்டார் வாகனங்கள் தற்போது இலங்கை மற்றும் சீனாவில் இறக்கப்பட்டுள்ளன.