சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ ராஜகிரிய மேம்பாலத்திற்கு அருகில் பயணித்தபோது, அவரது வாகனத் தொடரை இலக்கு வைத்து அருகிலுள்ள எரிபொருள் வரிசையில் நின்ற மக்கள் ஆத்திரமடைந்து 'கற்கள் வீசப்பட்டதாக' ஒரு போலிச் செய்தி நேற்று (18) இரவு சில அரசியல் சமூக ஊடக பேஸ்புக் பக்கங்கள் ஊடாகப் பரப்பப்பட்டது. இந்தச் செய்தி உண்மையற்றது என்று பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்டன், அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ வாகனத் தொடருடன் பயணிக்கும் நபர் அல்ல என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இந்த போலிச் செய்தியைப் பரப்பியவர்களில் சிலர் ஏற்கனவே தங்கள் பதிவுகளை நீக்கியுள்ளமை இன்று காலை அவதானிக்கப்பட்டது.சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சரின் தலைமையில், சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவுவதைத் தடுப்பதற்கான நடைமுறை நடவடிக்கைகள் குறித்து, Facebook இன் உரிமையாளரான அமெரிக்க மெட்டா (Meta) நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று (18) பிற்பகல் ஒரு விசேட கலந்துரையாடல் நடைபெற்ற பின்னரே இந்தச் செய்தி வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தக் கலந்துரையாடலின் போது, போலித் தகவல்களுக்கு எதிராக சரியான தகவல்களைப் பரவலாக்குவதிலும், தகவல்களின் டிஜிட்டல் உள்ளடக்கத்தின் துல்லியத்தை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த விசேட கலந்துரையாடலில் மெட்டா நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி மத்திய ஆசியா, மங்கோலியா, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பொதுக் கொள்கை தலைவர் செனுர அபேவர்தன, தெற்காசியாவிற்கான பொதுக் கொள்கை உதவி முகாமையாளர் தெஹாரா புஞ்சிஹேவா, ஆசிய பசுபிக் பாதுகாப்பு கொள்கை தலைவர் பிரியங்கா பல்லா, “நாடு ஒன்றாக” தேசிய செயற்பாட்டுக் குழுவின் மற்றும் Rebuilding Sri Lanka ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் மந்தனா இஸ்மாயில் அபேவிக்ரம, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதற்கு முன்னர், கடந்த 3ஆம் திகதி தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திடம் இருந்து ஒரு பில்லியன் ரூபா நட்டஈடு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ நடவடிக்கை எடுத்திருந்தார். இது விமல் வீரவன்ச நடத்திய ஒரு பொதுக் கூட்டத்தில், சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ இலங்கையில் தடைசெய்யப்பட்ட மருந்து நிறுவனத்தின் கிரெடிட் கார்டைப் (Credit Card) பயன்படுத்தி பொருட்களை வாங்கியதாக பகிரங்கமாக வெளியிட்ட அறிக்கை தொடர்பானது.
2022 ஆம் ஆண்டில், நாட்டை பொருளாதார ரீதியாக வீழ்த்திய அப்போதைய அரசாங்கத்திற்கு பணம் இல்லாததால், மக்கள் பாதிக்கப்பட்டு எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார நெருக்கடி ஏற்பட்டது. அப்போது அப்போதைய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் இதுபோன்ற கூச்சலிடும் எதிர்வினைகளை எதிர்கொள்ள நேர்ந்தது. அரசியல் ரீதியாக இயங்கும் சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் சில ஊடகங்கள் அப்போதைய அனுபவங்கள் மீண்டும் ஏற்பட்டதைப் போல சித்தரிக்க முயற்சிக்கும் மற்றொரு முயற்சியின் விளைவாகவே இதுபோன்ற போலிச் செய்திகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது கண்டறியப்பட்டது.