புலத்சிங்கள பிரதேசத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் ஏற்பட்ட மோதலைக் கட்டுப்படுத்த முயன்ற இரு பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தாக்கி காயப்படுத்திய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சந்தேக நபர்கள் புலத்சிங்கள, கவரகிரிய மற்றும் நிக்கஹ பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிகிச்சைக்காக தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த இசை நிகழ்ச்சி புலத்சிங்கள பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றின் பழைய மாணவர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், கடந்த 7ஆம் திகதி இரவு புலத்சிங்கள விளையாட்டரங்கில் நடைபெற்றது. இரவு 1.00 மணியளவில் அங்கு கூடியிருந்த மதுபோதையில் இருந்த சிலர் ஒரு யுவதி தொடர்பில் ஏற்பட்ட தகராறு முற்றியதால் இந்த மோதல் ஏற்பட்டது. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாக தலையிட்டு நிலைமையைக் கட்டுப்படுத்தி, மோதலில் ஈடுபட்டவர்களை விளையாட்டரங்கிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.
எவ்வாறாயினும், விளையாட்டரங்கிலிருந்து வெளியேறிய அந்தக் குழுக்கள் மீண்டும் ஒருவருக்கொருவர் மோதலில் ஈடுபட்டனர். அப்போது வெளியே கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நிலைமையைச் சமாதானப்படுத்த மீண்டும் தலையிட்டனர். அப்போது கோபமடைந்த குழுவினர் சம்பந்தப்பட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கடுமையாகத் தாக்கியதுடன், ஒரு உத்தியோகத்தரின் சீருடையையும் கிழித்துள்ளனர். தாக்குதலில் காயமடைந்த அந்த இரு உத்தியோகத்தர்களும் ஆரம்ப சிகிச்சைக்காக புலத்சிங்கள வைத்தியசாலைக்கும், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை ஆதார வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
மோதல் இடம்பெற்ற இடத்தை பரிசோதித்தபோது, இரும்புத் துண்டு பொருத்தப்பட்ட சுமார் நான்கு அடி நீளமுள்ள ஒரு இரும்புக் கம்பி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில சந்தேக நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். புலத்சிங்கள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ. எஸ். என். கஸ்தூரிஆரச்சி அவர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.