
இலங்கை முழுவதும் தற்போது நிலவும் கடுமையான வறண்ட வானிலை மே மாத இறுதி வரை மாறாமல் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த அதிக வெப்பமான நிலைமைக்கு முக்கியமாக இடைப்பருவமழை காலப்பகுதியுடன் இணைந்த காற்றின் ஓட்டத்தில் காணப்படும் பலவீனமான தன்மையே காரணம் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல பகுதிகளில் ஏற்கனவே கடுமையான வெப்பம் உணரப்பட்டு வரும் நிலையில், சில இடங்களில் மனித உடலுக்கு உணரும் வெப்பம் 'கவனிக்கப்பட வேண்டிய' ஆபத்தான மட்டத்தில் இருப்பதால், அது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அவர் சம்பந்தப்பட்ட பிரதேச மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நிலையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அடிக்கடி போதுமான அளவு தண்ணீர் அருந்துவதும், முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுப்பதும் மிகவும் முக்கியம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், சிறு குழந்தைகள், வயோதிபர்கள் மற்றும் நோயாளிகள் தொடர்பில் இந்த நாட்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அவர்கள் அறிவுறுத்துகின்றனர். அத்துடன், கடுமையான சோர்வூட்டும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துமாறும், உடலுக்கு இலகுவான வெளிர் நிற அல்லது வெள்ளை நிற ஆடைகளை அணியுமாறும் சம்பந்தப்பட்ட அறிவிப்பு மேலும் தெரிவித்துள்ளது.