18,000 மெட்ரிக் தொன் பெற்றோல் மற்றும் 20,000 மெட்ரிக் தொன் டீசல் என மொத்தம் 38,000 மெட்ரிக் தொன் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை ஏற்றிய இந்தியக் கப்பல் இன்று (28) இலங்கையை வந்தடையவுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் நேற்று (27) அறிவித்தது.
லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் ஊடாக நாட்டின் எரிபொருள் விநியோகத்தை தடையின்றிப் பேணுவதற்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்திய அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மார்ச் மாதத்திற்கான இலங்கைக்குத் தேவையான எரிபொருளை மத்திய கிழக்கு மற்றும் சிங்கப்பூர் பிராந்தியங்களில் இருந்து பெற்றுக்கொள்ள லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் ஏற்கனவே உடன்பாடுகளை ஏற்படுத்தியிருந்தது. இருப்பினும், ஈரான் போர் நிலைமை காரணமாக ஏற்பட்ட தாக்கத்தினால், அந்த எரிபொருள் ஆர்டர்கள் ஒப்பந்தப்படி குறித்த நேரத்தில் வழங்க முடியாது என சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர்கள் இலங்கைக்கு அறிவித்துள்ளனர்.
இந்த நிலைமையின் கீழ் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் ஊடாக இந்திய அரசாங்கத்தின் உதவியைப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று நாட்டிற்கு வரும் இந்த எரிபொருள் கப்பல் அந்த கோரிக்கைக்கு ஒரு பிரதிபலிப்பாகவும், வழங்கப்பட்ட உதவியின் ஒரு படியாகவும் கருதப்படுகிறது.
இதற்கிடையில், இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் இடையில் அண்மையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதற்கு முன்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜேதா ஹேரத் அவர்களுக்கும் இடையில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்த இரண்டு உயர்மட்ட பேச்சுவார்த்தைகளிலும் இலங்கையின் எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாகப் பேணுவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டு கலந்துரையாடப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.