சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான உயிருள்ள அலங்கார தாவரங்களை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வந்த இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். எதுவும் அறிவிக்கப்படாத பயணிகள் செல்லும் "பசுமை வழித்தடம்" வழியாக விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்றபோது, நேற்று முன்தினம் (27) அதிகாலையில் இந்த நபர் சுங்க வலையில் சிக்கியுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய வர்த்தகர் ஆவார். அவர் நேற்று அதிகாலை 12.30 மணியளவில் தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.- 405 என்ற விமானத்தில் நாட்டிற்கு வந்துள்ளார். சந்தேகநபரின் பயணப் பொதியை சோதனை செய்தபோது, காகிதத் தாள்களில் சுற்றி மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த அலங்கார தாவரத் தொகுதியை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த தாவரத் தொகுதியை இலங்கைக்கு கொண்டு வர தேவையான செல்லுபடியான இறக்குமதி அனுமதிப்பத்திரம் அல்லது தாவர சுகாதார பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் இவரிடம் இருக்கவில்லை. இச்சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் முறையான விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், சம்பந்தப்பட்ட அலங்கார தாவரத் தொகுதி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு, இந்த தாவரங்களை நாட்டின் சுற்றுச்சூழலில் வெளியிடுவதால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்பதற்காக, தாவரத் தொகுதியை அழிப்பதற்காக கட்டுநாயக்க தாவர தனிமைப்படுத்தல் நிறுவனத்திடம் ஒப்படைக்க சுங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.