'தங்கொட்டுவ ஆவா'வின் கும்பல் காதலர்கள் இருவரை வாளால் தாக்கி மோட்டார் சைக்கிளை கொள்ளையிட்டுள்ளது

a-couple-was-attacked-with-a-sword-and-their-motorcycle-was-stolen

தங்கொட்டுவ பிரதேசத்தில் இளைஞர் ஒருவருக்கும் அவரது காதலிக்கும் வாள்களால் தாக்கி காயப்படுத்தி மோட்டார் சைக்கிளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் 22 வயதுடைய தம்பதியினர் ஹலாவத்த பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 26ஆம் திகதி மாலை வென்னப்புவ, லூணுவில, கிரிமட்டியான சந்தியில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த சந்தேகநபர்களிடம் இருந்து 22 கிராம் 260 மில்லிகிராம் ஹெரோயினும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.




இந்த சந்தேகநபரான தம்பதியினர், தற்போது டுபாய்க்கு தப்பிச் சென்று மறைந்திருக்கும் சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான 'தங்கொட்டுவ அவா' என்பவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த மோட்டார் சைக்கிள் கொள்ளையும் அந்த கடத்தல்காரரின் வழிகாட்டலின் பேரில் இடம்பெற்றதாக சந்தேகிக்கப்படும் நிலையில், இந்த குற்றத்துடன் தொடர்புடைய மேலும் ஐவர் கைது செய்ய பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த கொள்ளைக்கு இலக்கானவர்கள் 19 வயதுடைய இளைஞர் ஒருவரும் அவரது காதலியுமாவர். குறித்த இளைஞர் தனது மோட்டார் சைக்கிளை விற்பனை செய்வதற்காக வெளியிட்ட விளம்பரத்தின்படி, அதனை வாங்குவதாக கூறி ஒருவர் தொலைபேசியில் அழைத்து தங்கொட்டுவ கட்டவெவில்ல குளம் அருகே வருமாறு அறிவித்துள்ளார். அதன்படி, இளைஞர் தனது காதலியுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் கடந்த 22ஆம் திகதி இரவு குறித்த இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு குளத்தின் மேற்பகுதியில் மறைந்திருந்த இருவர் அவர்களை வாள்களால் தாக்கி காயப்படுத்தி, சுமார் நான்கு இலட்சத்து இருபத்தெட்டு ஆயிரம் ரூபாய் பெறுமதியான இளைஞரின் மோட்டார் சைக்கிளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.




வாள் தாக்குதலில் காயமடைந்த இளைஞரும் யுவதியும் தற்போது நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரான தம்பதியினர் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஹலாவத்த பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவர்களை வென்னப்புவ மற்றும் தங்கொட்டுவ பொலிஸ் நிலையங்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். வடமேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்ஸிரி ரோஹண, ஹலாவத்த பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் பெரேரா மற்றும் வென்னப்புவ உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அசேல புல்வங்ச ஆகியோரின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டலின் கீழ் தங்கொட்டுவ பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post