பிரித்தானியாவின் பல முன்னணி பல்கலைக்கழகங்கள் தற்போது இந்தியாவில் தங்கள் கிளைகளை நிறுவி வருகின்றன. இதில் யோர்க் (York) மற்றும் சவுத்தாம்ப்டன் (Southampton) பல்கலைக்கழகங்கள் முன்னணியில் உள்ளன. குறிப்பாக, 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் மும்பை நகரில் உள்ள போவாய் ஏரிக்கு அருகில் யோர்க் பல்கலைக்கழகத்தின் புதிய கிளையின் இறுதிப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகம் ஏற்கனவே டெல்லியில் தனது கிளையைத் திறந்துவிட்டது.
யோர்க் பல்கலைக்கழகம் 2026-27 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையைத் தொடங்கியுள்ளது. முதல் ஆண்டில் சுமார் 270 மாணவர்களை மட்டுமே சேர்க்க திட்டமிட்டுள்ள நிலையில், அடுத்த சில ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை 3,000 முதல் 4,000 வரை அதிகரிக்க எதிர்பார்க்கிறது.வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு இந்தியாவில் கதவுகள் திறக்கப்பட்டது 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்திய தேசியக் கல்வி கொள்கை மூலமாகவே ஆகும். அதற்கான சட்டக் கட்டமைப்பு 2023 இல் வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு பிரித்தானியப் பிரதமர் சர் கீர் ஸ்டார்மரின் இந்தியப் பயணத்துடன் இணைந்து, அபெர்டீன், பிரிஸ்டல், லிவர்பூல் மற்றும் குயின்ஸ் போன்ற மேலும் ஒன்பது பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்கள் கிளைகளை நிறுவ ஒப்புக்கொண்டுள்ளன. நிதிச் சிக்கல்களை எதிர்கொள்ளும் பிரித்தானியப் பல்கலைக்கழகங்களுக்கும், உயர்தரக் கல்வியை எதிர்பார்க்கும் இந்திய மாணவர்களுக்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பாகத் தெரிகிறது.
பிரித்தானிய அரசாங்கத்தின் தரவுகளின்படி, தற்போது இந்தியாவில் சுமார் 40 மில்லியன் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளனர். இது 2035 ஆம் ஆண்டுக்குள் மேலும் 70 மில்லியன் வாய்ப்புகளாக அதிகரிக்கும். இந்தியாவில் ஆண்டுதோறும் 11 மில்லியன் மாணவர்கள் தங்கள் பள்ளிப் படிப்பை முடிக்கின்றனர். அவர்களில் 1.5 முதல் 1.7 மில்லியன் பேர் உயர்தரக் கல்வித் திறன்களைக் கொண்டுள்ளனர். இருப்பினும், இந்தியாவின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களால் ஆண்டுக்கு சுமார் 200,000 மாணவர்களை மட்டுமே சேர்க்க முடிவதால், பிரித்தானியப் பல்கலைக்கழகங்களுக்கு இந்தியாவில் ஒரு பெரிய சந்தை உருவாகியுள்ளது.
இந்த புதிய பல்கலைக்கழகக் கிளைகளின் கட்டணங்கள் பிரித்தானியாவில் உள்ள தாய் பல்கலைக்கழகங்களின் கட்டணத்தில் சுமார் 50% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பெரும்பாலான இந்திய மாணவர்கள் சர்வதேச வேலை அனுபவத்தைப் பெறும் நோக்கத்துடன் வெளிநாடுகளில் கல்வி கற்கச் செல்வதால், இந்தியாவில் வழங்கப்படும் பிரித்தானியப் பட்டம் அவர்களின் அந்த எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்யுமா என்பது ஒரு கேள்விக்குறியே. ஆனாலும், பிரித்தானியாவின் கடுமையான விசா சட்டங்களின் மத்தியில், குறைந்த செலவில் மற்றும் விசா ஆபத்து இல்லாமல் சர்வதேச தரத்திலான கல்வியை எதிர்பார்க்கும் உயர் நடுத்தர வர்க்க மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த மாற்றாக அமையும்.
இந்த திட்டங்களின் வெற்றி பெரும்பாலும் இந்தியாவில் நிலவும் ஒழுங்குமுறை சவால்கள் மற்றும் உள்கட்டமைப்பு சிக்கல்களை சமாளிப்பதைப் பொறுத்தது. புதிய பல்கலைக்கழகங்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய சுமார் 30,000 ஏக்கர் நிலமும், சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான பெரிய முதலீடும் தேவை என்று ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான அனரோக் சுட்டிக்காட்டுகிறது. இதன் காரணமாக, பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் நிரந்தரக் கட்டிடங்களை நிர்மாணிப்பதை விட, தற்போதுள்ள கட்டிடங்களை வாடகைக்கு எடுக்கும் முறைகளை நாடும் போக்கு காணப்படுகிறது.
கடந்த ஆண்டு பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் ஏற்றுமதி வருவாயாக 43 பில்லியன் டாலர்களை ஈட்டின. இதில் சர்வதேச கிளைகள் மூலம் கிடைத்த தொகை 1.34 பில்லியன் டாலர்கள் மட்டுமே. இந்தியாவில் இந்த புதிய விரிவாக்கங்கள் மூலம் பிரித்தானியப் பொருளாதாரத்திற்கு சுமார் 67 மில்லியன் டாலர் வளர்ச்சி சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இது 2024 ஆம் ஆண்டில் இந்திய மாணவர்கள் பிரித்தானியாவுக்கு வந்து கல்வி கற்றதன் மூலம் அந்நாட்டுப் பொருளாதாரத்திற்கு வழங்கப்பட்ட 5.3 பில்லியன் டாலர் அளவிலான பெரிய பங்களிப்புடன் ஒப்பிடுகையில் மிகச் சிறிய தொகையாகும்.