மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் கல்வி கற்கும் தனது காதலியைச் சந்திக்கும் நோக்குடன், போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி அந்தப் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய முயன்ற கொழும்புப் பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மொரட்டுவைப் பிரதான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மாத்தறைப் பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஆவார். இவர் மொரட்டுவைப் பல்கலைக்கழக மாணவர் என்று கூறி அதன் பிரதான வாயில் வழியாக நுழைய முயன்றுள்ளார். அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அவரது அடையாள அட்டையைக் கேட்டுச் சோதித்துள்ளனர்.
அச்சந்தர்ப்பத்தில் அவர் சமர்ப்பித்த அடையாள அட்டை போலியானது என்பதை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அதன்படி, இது குறித்து பல்கலைக்கழகத்தின் ஒழுங்குப் பொறுப்பு விரிவுரையாளருக்கு அறிவிக்க அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பின்னர் மாணவர் மொரட்டுவைப் பிரதான பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த அடையாள அட்டை போலியாகத் தயாரிக்கப்பட்டது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் விசாரணைகளின் போது சந்தேகநபரான மாணவர், தான் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதாகவும், மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் தனது காதலியைச் சந்திப்பதற்காகவே இவ்வாறு போலி அடையாள அட்டையைத் தயாரித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
வேறொருவர் போல ஆள்மாறாட்டம் செய்தமை மற்றும் சட்டவிரோதமாக நுழைந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பயன்படுத்திய போலி அடையாள அட்டையும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேல் மாகாண தென் பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சமந்த விஜேசேகரவின் மேற்பார்வையின் கீழ், கல்கிசைப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அசோக குணசேகரவின் அறிவுறுத்தலின் பேரில், மொரட்டுவைப் பிரதான பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் நிஹால் பிரான்சிஸ் தலைமையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.