திருகோணமலை, புறாத்தீவு கடற்பகுதியில் பிரான்ஸ் நாட்டு சுற்றுலாப் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் ஒருவர் குச்சவெளி சுற்றுலாப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 26ஆம் திகதி இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் குச்சவெளி, கோபாலபுரம் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த வெளிநாட்டுப் பெண் இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த நிலையில் திருகோணமலை, அலஸ்வத்த பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளார். அந்தக் காலப்பகுதியில் கடற்கரைக்குச் சென்ற சந்தர்ப்பத்தில் அவர் இந்த சந்தேகநபரான இளைஞருடன் அறிமுகமாகி, பின்னர் அவர்களுக்கு இடையில் ஒருவித நட்பு உருவாகியுள்ளது.
அதன்பின்னர் அவர்கள் இருவரும் இணைந்து படகு மூலம் புறாத்தீவுக்குச் சென்றுள்ளனர். அங்கு நீச்சல் உபகரணங்களை அணிந்து கடலில் நீந்திக் கொண்டிருந்தபோது இந்த பாலியல் தொல்லை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடலுக்கு அடியில் சம்பந்தப்பட்ட இளைஞர் தனக்குத் தொல்லை கொடுத்ததாக அந்த பிரான்ஸ் நாட்டுப் பெண் புறாத்தீவில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உயிர் காப்பு அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
அப்பெண்ணின் முறைப்பாட்டின்படி உடனடியாகச் செயற்பட்ட உயிர் காப்பு அதிகாரிகள் சந்தேகநபரைப் பிடித்து மேலதிக விசாரணைகளுக்காக குச்சவெளி சுற்றுலாப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் அமரகோன் அவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்பின்னர் பொலிஸார் அவரை இவ்வாறு கைது செய்துள்ளனர்.