மின் ஊழியர்களின் பல கோரிக்கைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில்

good-responses-from-the-government-to-many-demands-of-electrical-workers

இலங்கை மின்சார சபையுடன் இணைந்ததாக ஸ்தாபிக்கப்பட்ட EGL, EDL, NSO மற்றும் NTNSP ஆகிய நான்கு பிரதான நிறுவனங்களின் பணிப்பாளர் சபை மற்றும் மின்சார சபையின் 25 தொழிற்சங்கங்களுக்கு இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊழியர்களின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, தொழிற்சங்கங்களால் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட 64 பிரதான கோரிக்கைகளில் 62 கோரிக்கைகளை நிறைவேற்ற சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகள் தமது இணக்கத்தை வெளியிட்டுள்ளன.




மின்சக்தி அமைச்சரின் ஒப்புதல் மற்றும் தலையீட்டுடன், 2026 மார்ச் 10 அன்று எட்டப்பட்ட இந்த புதிய ஒப்பந்தங்களின்படி, ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்படும் 1,000 ரூபா மற்றும் 10,000 ரூபா கொடுப்பனவுகளை தொடர்ந்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த கொடுப்பனவுகள் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவுடன் இணைக்கப்பட்டு, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக முழுமையாக செலுத்தப்படவுள்ளது. மேலும், புதிய நிறுவனங்களின் கீழ் ஊழியர்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்ட புதிய ஊதிய முறை அறிமுகப்படுத்தப்படும் வரை, இலங்கை மின்சார சபையால் இதுவரை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட வருடாந்த போனஸ் கொடுப்பனவை (Bonus) எவ்வித மாற்றமுமின்றி வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஊழியர்கள் கோரிய ஓய்வூதிய உரிமை கொடுப்பனவு தொடர்பில் சாதகமாக பரிசீலிப்பதற்காக CEBEF நிறுவனத்திற்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கவும் அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

மின்சார விநியோகம் அத்தியாவசிய சேவையாகக் கருதப்படுவதால், பொதுமக்களுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தி தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கைகளையும் வேலைநிறுத்தங்களையும் உடனடியாக நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட நான்கு நிறுவனங்களின் தலைவர்கள் தொழிற்சங்கங்களிடம் கடுமையாக கோரிக்கை விடுத்துள்ளனர். ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு தமது அன்றாட கடமைகளை மீண்டும் ஆரம்பித்தால் மாத்திரமே, அவர்களின் எஞ்சிய இரண்டு கோரிக்கைகள் மற்றும் குறிப்பாக கோரப்பட்ட சம்பள அதிகரிப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக அடுத்த இரண்டு நாட்களுக்குள் ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடலை ஏற்பாடு செய்ய மின்சக்தி அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

good-responses-from-the-government-to-many-demands-of-electrical-workers

Post a Comment

Previous Post Next Post