சக்திவாய்ந்த பாதாள உலகத் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ஹரக் கட்டாவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து விடுவிப்பதற்காக அந்த இடத்தின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் நேற்று (30) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார். ராஜபக்ஷ பத்திரணலாகே பிரபாத் மதுசங்க என்ற 'மிதிகம சூட்டி' என அழைக்கப்படும் 38 வயதுடைய இந்த சந்தேகநபர் ஓமானில் இருந்து இவ்வாறு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
அதிகாலை 4.27 மணியளவில் மஸ்கட் நகரிலிருந்து வந்த சலாம் விமான சேவைக்குச் சொந்தமான OV-437 விமானத்தில் அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட பின்னர், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரை உத்தியோகபூர்வமாக கைது செய்தனர்.சர்வதேச பொலிஸ் ஊடாக சிவப்பு அறிவித்தல் கூட வெளியிடப்பட்டிருந்த மிதிகம சூட்டி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஓமான் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சர்வதேச பொலிஸ் ஊடாக இலங்கைக்கு அறிவிக்கப்பட்ட பின்னர், நாட்டின் அதிகாரிகள் அவரை நாடுகடத்தல் சட்டத்தின் கீழ் ஒப்படைக்குமாறு ஓமானிடம் கோரினர். அந்த கோரிக்கைக்கு ஓமான் அதிகாரிகள் இணக்கம் தெரிவித்த போதிலும், அவருக்கு எதிராக அங்கு நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த வழக்கு காரணமாக அவரை நாட்டிற்கு அழைத்து வருவது தாமதமானது. இந்த மாத தொடக்கத்தில் அந்த வழக்கு நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியிலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட பொலிஸ் குழுவொன்று ஓமானுக்குச் சென்று அவரை தமது பொறுப்பில் எடுத்தது.
ஓமான் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டபோது இந்த சந்தேகநபர் தனக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக போலியாக நடித்து அதிகாரிகளை திசைதிருப்ப முயன்றதும் தற்போது தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்கள தலைமையகத்திற்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர், தற்போது தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளார்.
முன்னதாக 2023 ஆம் ஆண்டு மடகாஸ்கரில் கைது செய்யப்பட்டு, அதே ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட 'ஹரக் கட்டா' மற்றும் 'குடு சலிந்து' குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, ஊழல் பொலிஸ் அதிகாரிகளின் உதவியுடன் அவர்கள் தப்பிச் செல்ல திட்டமிட்டதற்குப் பின்னால் இந்த மிதிகம சூட்டி என்பவரே இருந்துள்ளார். அந்த முயற்சி தோல்வியடைந்த பின்னர், திணைக்களத்தின் மீது தாக்குதல் நடத்தி அவர்களை விடுவிக்க இவர் திட்டமிட்டிருந்தார், அதற்காக ஹரக் கட்டாவின் மற்றொரு முக்கிய சீடரான 'மிதிகம ருவன்' என்பவரின் உதவியும் கிடைத்துள்ளது.
துபாய் இராச்சியத்தில் இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட மோதல் காரணமாக 2024 ஆம் ஆண்டு அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மிதிகம ருவன், அதே ஆண்டு மே மாதம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழுவொன்றினால் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார். தற்போது பூஸ்ஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர் வெலிகம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையை சிறைச்சாலையிலிருந்து இயக்கியுள்ளதும் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த கொலை நடந்த காலகட்டத்தில் மிதிகம சூட்டி ஓமான் பாதுகாப்புப் படையினரின் பொறுப்பில் இருந்துள்ளார்.