கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு அறவிடப்பட்ட கட்டணத்தை மறு அறிவித்தல் வரும் வரை முழுமையாக இடைநிறுத்த கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இன்று (18) கொழும்பு மேயர் வ்ராய் கெல்லி பால்டசார் அம்மையாரின் தலைமையில், மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பங்கேற்புடன் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக பிரதி மேயர் ஹேமந்த வீரக்கோன் தெரிவித்தார்.
உலகளாவிய யுத்த சூழ்நிலை மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்குடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இதற்கான மாநகர சபை நிதிக்குழுவின் ஒருமித்த அங்கீகாரமும் கிடைத்துள்ளது.
இதன்படி, முன்னர் காலை 6.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை வாகனங்களை நிறுத்துவதற்கு அறவிடப்பட்ட கட்டண முறைமை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாகவும், மறு அறிவித்தல் வரும் வரை பொதுமக்களிடம் எந்தவித வாகன நிறுத்துமிட கட்டணமும் அறவிடப்பட மாட்டாது எனவும் பிரதி மேயர் மேலும் வலியுறுத்தினார்.