ஈரானுக்குச் சொந்தமான 'IRIS Bushehr' கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், அந்தக் கப்பலின் ஊழியர்கள் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
ஜனாதிபதி செயலகத்தில் ஊடகங்களுக்கு உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இந்தக் கப்பல் தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளான கப்பல் என்றும் அவர் கூறினார்.
அந்தக் கப்பலில் இருந்த 208 பேர் கொண்ட குழுவினரை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இலங்கையின் நிலப்பரப்பு, கடல் பகுதிகள் மற்றும் வான்பரப்பு எந்தவொரு நாட்டிற்கும் மோதல்களில் சார்பாகப் பயன்படுத்தப்படவோ அல்லது வேறு எந்த நாட்டிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படவோ அனுமதிக்கப்படாது என்பதையும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.
“எந்தவொரு சர்வதேச மோதலிலும், எமது நிலைப்பாட்டின் நடுநிலைமை, எமது நிலப்பரப்பு, எமது கடல் பகுதிகள், எமது வான்பரப்பு ஆகியவை எந்தவொரு நாட்டிற்கும் மோதலில் சார்பாகவோ அல்லது எந்தவொரு நாட்டிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலோ பயன்படுத்தப்பட ஒருபோதும் அனுமதிக்கப்படாது. அதுவே எமது நிலைப்பாடு. எனவே, மோதல் ஆரம்பித்த உடனேயே நாம் எடுத்த நடவடிக்கைகள், நாம் வெளியிட்ட அறிக்கைகள் அனைத்தும் இந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே நாம் செயல்பட்டு வருகிறோம்.
அதற்கிணங்கவே ஈரானின் இரண்டு கப்பல்கள் தொடர்பான பிரச்சினை எழுந்துள்ளது, அதிலும் நாம் நடுநிலைமையைப் பேணி வருகிறோம். அதேபோல், ஒரு தேசமாகவும் ஒரு நாடாகவும், நடுநிலைமையைப் பாதுகாக்கும் அதே வேளையில், மனிதநேயத்திற்கு நாம் முதலிடம் கொடுக்கிறோம். எனவே, மனிதநேயத்தைப் பாதுகாப்பதற்கும், மனித உயிர்களைப் பாதுகாப்பதற்கும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் இருந்தால், அவற்றை எடுக்க நாம் ஒருபோதும் தயங்க மாட்டோம். ஒரு அரசு எடுக்க வேண்டிய மிகச் சிறந்த கொள்கை இது என்று நான் நினைக்கிறேன். நாம் அந்தக் கொள்கைகளின் அடிப்படையில் செயல்படுகிறோம்.”