
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு எரிபொருள் விநியோகம் தாமதமானதால், தற்போதுள்ள கையிருப்புகளை நிர்வகிக்கும் நோக்கில் அரசாங்கத்தால் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட QR மற்றும் ஒற்றைப்படை - இரட்டைப்படை முறைமை காரணமாக, தற்போது நாடு முழுவதும் நீண்ட எரிபொருள் வரிசைகள் பெருமளவில் குறைந்துள்ளன. நேற்று (19ஆம் திகதி) முதல் இந்த முறை அமுலுக்கு வந்ததையடுத்து, சில பகுதிகளில் எரிபொருள் வரிசைகள் முழுமையாகக் காணப்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூரா நெத்திகுமார தெரிவித்துள்ளார்.
நேற்று எரிபொருள் தாங்கிய கப்பல் ஒன்று தீவை வந்தடைந்ததுடன், எதிர்காலத்தில் வரவிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கையிருப்புடன் எதிர்வரும் மே மாதம் இறுதி வரை எரிபொருள் விநியோகத்தை எந்தப் பிரச்சினையுமின்றிப் பேண முடியும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார். வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கம் மற்றும் மாதாந்த நாட்காட்டியின்படி ஒற்றைப்படை அல்லது இரட்டைப்படை நாட்களுக்கு ஏற்ப எரிபொருள் விநியோகம் இடம்பெறுவதுடன், வாகனங்களின் உரிமையை தங்கள் பெயருக்கு மாற்றாதவர்களுக்கு QR வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் பணிகளும் தற்போது பெருமளவில் நிறைவடைந்துள்ளதாக முகாமைத்துவப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், வழமை போன்று நாளைய மற்றும் மறுநாள் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் விநியோகம் இடம்பெறாது என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதனால் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்கும், ஆர்டர்கள் தாமதமாவதைத் தவிர்ப்பதற்கும் சம்பந்தப்பட்ட காசோலைகளை முந்தைய நாளே மொத்த முனையம் அல்லது ஆர்டர் பிரிவில் ஒப்படைக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த சமகி ஒருங்கிணைந்த தொழிற்சங்கக் கூட்டணியின் அழைப்பாளர் ஆனந்த பாலித, தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாகக் கருதி விநியோகப் பணிகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார்.
இந்த புதிய விதிகளின்படி, இன்று இரட்டைப்படை நாள் என்பதால் வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கம் இரட்டைப்படை எண்ணாக உள்ள வாகனங்களுக்கு மட்டுமே எரிபொருள் பெற முடியும். இதற்கிடையில், டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது, QR முறைமை தொடர்பான பிரச்சினைகள் தற்போது முழுமையாகத் தீர்க்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த QR முறைமை ஆரம்பிக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு அண்மித்த காலம் கடந்துள்ள போதிலும், சில வாகன உரிமையாளர்களுக்கு இதுவரை ஒரு தடவையாவது எரிபொருள் பெற முடியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.