எனது தொலைபேசியை கொடுக்க முடியாது - சம்பிக்க ரணவக்க

i-cant-give-you-my-phone---champika-ranawaka

2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் முன்னாள் அமைச்சர் மற்றும் ஐக்கிய குடியரசுக் கட்சியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் ஜீப் வண்டி மோட்டார் சைக்கிளுடன் மோதியதால் ஏற்பட்ட விபத்து தொடர்பான உயர் நீதிமன்ற வழக்கில் சாட்சியாளரொருவரை அச்சுறுத்தி செல்வாக்குச் செலுத்திய சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியாளர்கள் பாதுகாப்புப் பிரிவு விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளது. குறித்த சாட்சியாளர் தனது பாதுகாப்பு குறித்து செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.




இந்தச் சம்பவம் தொடர்பில் கடந்த பெப்ரவரி மாதம் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் நெருங்கிய சகா எனக் கருதப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறித்த பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் கையடக்கத் தொலைபேசியைப் பரிசோதித்தபோது, அவருக்கும் ரணவக்கவுக்கும் இடையில் பரிமாறப்பட்டு நீக்கப்பட்ட சில வட்ஸ்அப் செய்திகள் குறித்து விசாரணையாளர்களின் கவனம் தீவிரமாக ஈர்க்கப்பட்டுள்ளதுடன், அதன் மூலம் வழக்கு தொடர்பான முக்கியமான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளதா என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. எவ்வாறாயினும், குறித்த சந்தேகநபர் அரசியல் காரணங்களுக்காக ஐக்கிய குடியரசுக் கட்சியிலிருந்து விலகி ரணவக்கவுடன் சில மனக்கசப்புகளுடன் இருந்தவர் என்றும் மேலதிகமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீக்கப்பட்ட செய்திகள் குறித்து எழுந்த சந்தேகத்தின் பேரில் இந்த விசாரணைகள் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன. அங்கு கடந்த மார்ச் 16 ஆம் திகதி ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக ரணவக்கவிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் மீண்டும் விசாரணைகள் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியாளர்கள் பாதுகாப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக தனது கையடக்கத் தொலைபேசியைப் பிரிவிடம் ஒப்படைக்குமாறு விசாரணையாளர்கள் ரணவக்கவுக்கு அறிவித்திருந்தனர்.




எனினும், அவர் தனது கையடக்கத் தொலைபேசியைப் பொலிஸ் பிரிவிடம் ஒப்படைக்க மறுத்துள்ளார். அதனைப் பெறுவதற்கு விசாரணையாளர்கள் தொடர்ந்து தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். எவ்வாறாயினும், குறித்த தொலைபேசியை நீதிமன்றத்தில் ஒப்படைக்க ரணவக்க இணக்கம் தெரிவித்துள்ளதால், நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் 29 ஆம் திகதி அவர் அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார் என தாம் நம்புவதாக பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியாளர்கள் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் ரோஹண கமகே தெரிவித்தார். அவ்வாறு சமர்ப்பிக்கப்படும் தொலைபேசி நீதிமன்ற உத்தரவின் பேரில் தடயவியல் பரிசோதனைக்காக அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் அனுப்பப்படவுள்ளதுடன், சாட்சியாளர்களை அச்சுறுத்தியது தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருடன் ஏதேனும் செய்திகள் பரிமாறப்பட்டுள்ளதா என்பது குறித்து அங்கு விரிவான பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படும்.

Post a Comment

Previous Post Next Post