
தாய்லாந்தில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு மீண்டும் இலங்கைக்குத் திரும்பிக்கொண்டிருந்த பௌத்த பிக்குகள் போல வேடமிட்ட இருபத்திரண்டு பேர், 110 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான போதைப்பொருள் தொகையுடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஏப்ரல் 25ஆம் திகதி இரவு பத்து மணியளவில் இலங்கைக்கு வந்துள்ளனர். இது கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் பதிவான மிகப்பெரிய போதைப்பொருள் கைப்பற்றல் என்பதுடன், பிக்குகள் குழுவொன்று போதைப்பொருளுடன் பிடிபட்ட முதல் சந்தர்ப்பமாகவும் கருதப்படுகிறது.
சந்தேகநபர்களிடம் இருந்த ஒரே மாதிரியான, வெவ்வேறு நிறங்களிலான பயணப் பைகளில் போலி அடிப்பாகங்கள் தயாரிக்கப்பட்டு இந்த போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, கல்வி உபகரணங்கள், இனிப்புப் பண்டங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் மத்தியில் நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 112 கிலோகிராம் எடையுள்ள 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' எனப்படும் போதைப்பொருள் தொகையை அதிகாரிகள் கண்டுபிடிக்க முடிந்ததுடன், ஒருவரின் பயணப் பையில் சுமார் ஐந்து கிலோகிராம் போதைப்பொருள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கடத்தலை கடவத்தை மற்றும் அகுணுகொலபெலஸ்ஸ பிரதேசங்களுடன் தொடர்புடைய அமித என்ற பிரதான பிக்கு ஒருவர் வழிநடத்தியுள்ளார். அவர் கம்பஹா மீகஹவத்த பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பேஸ்புக் மற்றும் வட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் உயர் கல்வி கற்கும் முப்பது வயதுக்குட்பட்ட இருபத்தொரு இளம் பிக்குகள் மற்றும் ஒரு பிரிவெனா ஆசிரியர் இந்த பயணத்திற்காக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி இவர்கள் தாய்லாந்துக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். விமான டிக்கெட்டுகள், தங்குமிடம் மற்றும் உணவு அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் ஒரு அனுசரணையின் கீழ் இது இடம்பெற்றுள்ளது. அங்கு பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான உபகரணங்கள் அடங்கிய சில பயணப் பைகளை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வருமாறு ஏற்பாட்டாளர்கள் அவர்களுக்கு அறிவித்துள்ளனர். தாய்லாந்தில் தங்கியிருந்த காலத்தில் இந்த குழுவினர் சிவில் உடையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததைக் காட்டும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் அவர்களின் கைத்தொலைபேசிகளில் இருந்து விசாரணையாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குழு கடந்த மாதமும் பன்னிரண்டு பிக்குகளை தாய்லாந்துக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும், அடுத்த மாதமும் மேலும் சிலரை அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபரான இருபத்திரண்டு பிக்குகளும் ஏப்ரல் 26ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவர்களை ஏழு நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய மேலதிக நீதவான் சுபானி அபேசேகர உத்தரவிட்டார்.
இதற்கிடையில், புத்தரின் ஆடையைப் போர்த்திக்கொண்டு இவ்வாறான ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவது இலங்கை பிக்கு சமூகத்தை உலகத்தின் முன் பெரும் அவமானத்திற்கு உள்ளாக்கும் செயல் என்று கூறி, மூன்று நிகாயக்களின் மகாநாயக்க தேரர்கள் ஒரு விசேட அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இந்த சட்டவிரோத மற்றும் சாசன விரோத செயலை கடுமையாக கண்டிப்பதாகவும், இதில் சம்பந்தப்பட்ட அனைத்து பிக்கு வேடதாரிகளுக்கும் சட்டத்தின் மூலம் உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதுடன், அவர்களை சாசனத்திலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் அந்த அறிக்கையின் மூலம் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.
