சாகரிகா ரயில் தடம் புரண்டதற்கு காரணமான அதிகாரிகளின் பணி இடைநீக்கம்

officials-involved-in-accepting-sagarika-train-suspended

கடந்த 24ஆம் திகதி தடம் புரண்ட ‘சாகரிகா’ அதிவேக ரயிலில் கடமையாற்றிய நான்கு ஊழியர்களின் சேவையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.




இவ்வாறு சேவை இடைநிறுத்தப்பட்டவர்களில் ரயிலின் பிரதான சாரதி, உதவி சாரதி, பிரதான கட்டுப்பாட்டாளர் மற்றும் உதவி கட்டுப்பாட்டாளர் ஆகியோர் அடங்குவதாக திணைக்கள வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

பெலியத்த ரயில் நிலையத்திலிருந்து மருதானை நோக்கிச் சென்று கொண்டிருந்த ‘சாகரிகா’ அதிவேக அலுவலக சேவை ரயில் கடந்த 24ஆம் திகதி காலை வாதுவ பிரதேசத்தில் திடீரென தடம் புரண்டது. இந்த விபத்து இடம்பெற்றபோது ரயிலின் பிரதான என்ஜின் மற்றும் பயணிகள் பெட்டிகள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து சென்றதுடன், இதனால் ரயிலில் பயணித்த பல பயணிகள் காயமடைந்தனர்.




சம்பவத்தில் காயமடைந்த சில பயணிகள் உடனடியாக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

ரயில் தடம் புரண்டதற்கான காரணம் மற்றும் அந்த நேரத்தில் கடமையில் இருந்த அதிகாரிகளால் ஏதேனும் கவனக்குறைவு ஏற்பட்டதா என்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணைகளுக்குப் பின்னரே இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முடிவடையும் வரை குறித்த நான்கு அதிகாரிகளுக்கும் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

Previous Post Next Post