இணையம் வழியாக முச்சக்கர வண்டி விற்பனைக்கு இருப்பதாக போலியான விளம்பரம் செய்து, நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் உள்ளவர்களிடம் பண மோசடி செய்த இருவரை கொம்பஞ்ஞவீதி பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சந்தேகநபர்கள், தாம் இலங்கை பொலிஸ் மற்றும் விமானப்படை அதிகாரிகள் என கூறிக்கொண்டு வாடிக்கையாளர்களை ஏமாற்றியுள்ளனர்.
சட்டத்தின் பிடியில் சிக்கியவர்கள் தெமட்டகொட மற்றும் சியம்பலாகுண பிரதேசங்களைச் சேர்ந்த 43 மற்றும் 47 வயதுடைய இரண்டு மேசன் தொழிலாளர்கள் ஆவர். இவர்கள் இணையத்தில் விளம்பரங்களை வெளியிட்ட பின்னர், அவர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக, கொழும்பு மத்திய பிரிவின் குற்றவியல் தடயவியல் ஆய்வகத்தில் பணிபுரியும் உண்மையான பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரினதும், விமானப்படை வீரர் ஒருவரினதும் உத்தியோகபூர்வ அடையாள அட்டைகளின் புகைப்படங்களை வட்ஸ்அப் (WhatsApp) ஊடாக அனுப்பியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறாக போலியான தகவல்களை வழங்கி, மஹியங்கனை, பதுளை, நுவரெலியா, கட்டுவன மற்றும் ராகம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களிடமிருந்து சுமார் 2,30,000 ரூபா பணத்தை முற்பணமாக தமது வங்கிக் கணக்குகளுக்குப் பெற்றுள்ளனர். கொம்பஞ்ஞவீதி பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் செயற்பட்ட அதிகாரிகள், இந்த மோசடி நடவடிக்கைக்கு பணம் வரவு வைக்கப்பட்ட இரண்டு வங்கிக் கணக்குகளை இதுவரை அடையாளம் கண்டுள்ளனர்.
அடையாளம் காணப்பட்ட ஒரு வங்கிக் கணக்குடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபரை சட்டத்தின் பிடியில் சிக்க வைப்பதற்காக பொலிஸ் விசாரணைகள் மேலும் நடைபெற்று வருகின்றன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்த இரண்டு கையடக்கத் தொலைபேசிகளும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதோடு, அந்த இரு சந்தேகநபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.