
கடந்த காலப்பகுதியில் ஆரச்சிக்கட்டு பல்சேவை கூட்டுறவுச் சங்கத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பான முக்கியமான ஆவணக் கட்டுகளைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில், அச்சங்கத்தின் பொது முகாமையாளர் ஆரச்சிக்கட்டு பொலிஸாரால் நேற்று முன்தினம் (04) கைது செய்யப்பட்டுள்ளார். அலுவலகத்தில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இந்த ஆவணக் கட்டுகளை, அவர் இரகசியமாக உரப்பையில் போட்டு எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர் மாதம்பே, சீகிரி வலவ்வத்தையைச் சேர்ந்த சுஜித் தேவப்பிரிய வீரவன்ச என்பவராவார். சந்தேகநபரான பொது முகாமையாளர் கைது செய்யப்பட்ட அதே நாளில் சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஆரச்சிக்கட்டு பல்சேவை கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் கடந்த வெள்ளிக்கிழமை ஆரச்சிக்கட்டு பொலிஸில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்திருந்தார். சம்பந்தப்பட்ட ஆவணங்கள் திருடப்பட்ட நேரத்தில், கூட்டுறவு அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கமரா அமைப்பும் வேண்டுமென்றே செயலிழக்கச் செய்யப்பட்டிருந்ததாக அந்த முறைப்பாட்டில் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கிடைத்த முறைப்பாட்டின் பேரில் உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார், விசாரணைகளின் பின்னர் சம்பந்தப்பட்ட பொது முகாமையாளரை சந்தேகத்தின் பேரில் கைது செய்ததுடன், பின்னர் அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த திருடப்பட்ட ஆவணக் கட்டுகளையும் கண்டுபிடிக்க முடிந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரோஹான் பெரேரா அவர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் ஆரச்சிக்கட்டு பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று மேலதிக விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.