தற்போதைய உலகப் போர்ச் சூழ்நிலைகள் காரணமாக பெரும் துன்பத்தை அனுபவித்து வரும் இந்நாட்டு மக்களை அதிலிருந்து விடுவிப்பதை நோக்கமாகக் கொண்டு, அரசாங்கத்தின் புதிய பொருளாதார நிவாரணப் பொதியை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று பாராளுமன்றத்திற்கு வருகை தந்தார். இதன்போது, எரிபொருள் மற்றும் எரிசக்தித் துறைகளில் அரசாங்கத்தின் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வலியுறுத்திய ஜனாதிபதி, எரிபொருள் செலவு மாற்றங்கள் மக்களின் வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கும் என்று சுட்டிக்காட்டினார்.
தற்போது சந்தை மதிப்புக்கு அமைய ஒரு லீட்டர் டீசலின் விலை 600 ரூபாயைத் தாண்டியுள்ள நிலையில், எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி அல்லது அதற்கு அண்மித்த தினத்தில் கடந்த மாதத்தின் உண்மையான தரவுகளின் அடிப்படையில் புதிய எரிபொருள் விலை சரிசெய்தல் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த சரிசெய்தலின் போது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் ஒரு லீட்டர் டீசலுக்கு 100 ரூபாயும், ஒரு லீட்டர் பெட்ரோலுக்கு 20 ரூபாயும் மானியம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், இதற்காக மாதத்திற்கு 20 பில்லியன் ரூபாய்கள் அதாவது 2000 கோடி ரூபாய்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இலக்கு வைக்கப்பட்ட சமூகத்திற்கு மூன்று மாத காலத்திற்கு இந்த நிவாரணம் கிடைக்கும். சரியான தரவுகள் இல்லாத காரணத்தினால் சூப்பர் டீசல் மற்றும் சூப்பர் பெட்ரோலுக்கு இந்த மானியம் கிடைக்காது, அவை சந்தை விலையில் விற்கப்படும். இருப்பினும், சாதாரண டீசலுக்கு வழங்கப்படும் 100 ரூபாய் மானியத்திற்காக மூன்று மாதங்களுக்கு 6,000 கோடி ரூபாய்களை அரசாங்கம் செலவிட வேண்டியிருக்கும்.
எரிபொருள் விலை உயர்வு மற்றும் நிலவும் வறண்ட காலநிலை காரணமாக மின் உற்பத்திக்கு அனல் மின் நிலையங்களைப் பயன்படுத்த வேண்டியிருப்பதால் மேலதிக செலவு ஏற்பட்டாலும், அந்த சுமையை நுகர்வோர் மீது சுமத்துவதற்குப் பதிலாக மூன்று மாத காலத்திற்கு அதை அரசாங்கம் ஏற்கவும் இங்கு முன்மொழியப்பட்டது. இதன் கீழ், மாதத்திற்கு 90 அலகுகளுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 15 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர, 'அஸ்வெசும' திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு, அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல், 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்காக ஒரு விசேட மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கும் ஜனாதிபதி முன்மொழிந்தார். அதன்படி, மிகவும் வறிய குடும்பத்திற்கு 7,500 ரூபாயும், வறிய குடும்பத்திற்கு 5,000 ரூபாயும், இடைநிலை குடும்பத்திற்கு 2,500 ரூபாயும் இந்த நிதி உதவி வழங்கப்படும்.
விவசாயத்தை மேம்படுத்துவதையும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு, எதிர்வரும் யால பருவத்திற்கான உர மானியமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், ஒரு ஹெக்டேருக்கான உர மானியம் 25,000 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாகவும், மேலதிக பயிர்களுக்கான 15,000 ரூபாய் மானியம் 18,000 ரூபாயாகவும் அதிகரிக்கப்படும். மேலும், யால பருவத்திற்காக 50 கிலோ யூரியா உரப் பொதி ஒன்றை 10,200 ரூபாய் நிலையான விலையில் விவசாய சேவை மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மீனவ சமூகம் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்காக ஒரு விசேட நிவாரணத் திட்டத்தை அமுல்படுத்தவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒரு நாள் மீன்பிடிப் படகுகளுக்கு ஒரு நாளைக்கு 25 லீட்டர் எரிபொருள் வீதம், மாதத்திற்கு அதிகபட்சம் 25 நாட்களுக்கு, ஒரு லீட்டருக்கு 50 ரூபாய் மானியம் மூன்று மாத காலத்திற்கு வழங்கப்படும். அத்துடன், எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் பல நாள் மீன்பிடிப் படகு உரிமையாளர்களுக்கு 150,000 ரூபாய் ஒரு முறை மட்டும் வழங்கப்படும் விசேட கொடுப்பனவை வழங்கவும் அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.