
குலியாப்பிட்டிய விஜய உதா கம்பொல விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தாண்டு இசை நிகழ்ச்சியின் போது, தேசிய மக்கள் சக்தியின் பண்டுவஸ்நுவர பிரதேச சபை உறுப்பினர் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் ஒன்பது பேர் கடந்த 18ஆம் திகதி குலியாப்பிட்டிய தலைமையகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏப்ரல் 17ஆம் திகதி நடைபெற்ற சிங்களப் புத்தாண்டு விழாவையொட்டி இரவு நேரத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு உள்ளானவர் அநுக்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய ஆர்.எம்.யூ. நிஷாந்த ரத்நாயக்க என்ற பிரதேச சபை உறுப்பினர் ஆவார். தாக்குதலில் காயமடைந்த அவர் தற்போது குலியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அனைவரும் 26 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அதே பிரதேசத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் குலியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்த நிலையில், சம்பவம் தொடர்பில் குலியாப்பிட்டிய தலைமையகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.