இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகம் மாற்றப்படுகிறது

the-administration-of-the-sri-lanka-cricket-institute-is-changing

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தற்போதைய நிர்வாகத்தில் ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், அதன் புதிய இடைக்கால நிர்வாகக் குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.




இந்த நியமனம், 2019 ஆம் ஆண்டு முதல் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராகப் பதவி வகித்த ஷம்மி சில்வா மற்றும் நிர்வாகக் குழுவினர் அனைவரும் கூட்டாகப் பதவி விலகியதைத் தொடர்ந்து இடம்பெற்றது. தேசிய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பின்னடைவு காரணமாக கிரிக்கெட் நிர்வாகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க விடுத்த கடுமையான அழுத்தம் இந்த பதவி விலகல்களுக்கு முக்கிய காரணமாக அமைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் தமது பதவி விலகல் கடிதங்களை இன்று (29) இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவிடம் கையளித்ததோடு, அமைச்சர் அந்த பதவி விலகல்களை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டார். அதன்பின்னர், 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 31 மற்றும் 34 ஆம் பிரிவுகளின் கீழ் அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ், இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




அதன்படி, இன்று பிற்பகல் விளையாட்டுத்துறை அமைச்சில் அமைச்சர் சுனில் குமார கமகே தலைமையில் ஒன்பது புதிய உறுப்பினர்களைக் கொண்ட இந்த இடைக்கால நிர்வாகக் குழு நியமிக்கப்பட்டது. தொழிலால் வங்கியாளராகவும், கிரிக்கெட் நிர்வாகம் குறித்து முன்னரும் கருத்துத் தெரிவித்தவருமான எரான் விக்கிரமரத்னவின் தலைமையில் இயங்கும் இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக முன்னாள் சிரேஷ்ட கிரிக்கெட் வீரர்கள் ரொஷான் மகாநாம, குமார் சங்கக்கார மற்றும் சிதத் வெத்தமுனி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் துஷிர ரதெல்ல, அவந்தி கொழும்பேகே, பிரகாஷ் ஷாஃப்டர், சட்டத்தரணி உபுல் குமாரப்பெருமா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி தினால் பிலிப்ஸ் ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாகச் செயற்படுகின்றனர்.

புதிய உத்தியோகத்தர் சபை தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் வரை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முடிவெடுக்கும் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை வழிநடத்தும் முழு அதிகாரமும் இந்த இடைக்காலக் குழுவிடம் உள்ளது. கிரிக்கெட் விளையாட்டின் தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் கண்டறிதல், நிர்வாகக் குழுவில் கட்டமைப்பு சீர்திருத்தங்களை அமுல்படுத்துதல் மற்றும் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தி எதிர்கால மூலோபாய மாற்றங்களைச் செய்தல் ஆகியவை இந்தக் சக்திவாய்ந்த குழுவை நியமிப்பதன் முக்கிய நோக்கங்களாகும்.



எவ்வாறாயினும், விளையாட்டுத்துறை சங்கங்களைக் கலைக்க நாட்டின் சட்டம் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு அதிகாரம் அளித்திருந்தாலும், தெரிவு செய்யப்பட்ட தேசிய நிறுவனத்தில் அரசாங்கம் தலையிடுவது கொள்கை ரீதியாக சர்வதேச கிரிக்கெட் சபையின் (ICC) சாசனங்களுக்கு முரணானது. ஆயினும், சர்வதேச கிரிக்கெட் சபைக்கு இந்த நிர்வாக மாற்றம் மற்றும் அதற்கான பின்னணி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் கிரிக்கெட் நிறுவனத்தில் தேர்தல் நடத்தப்படும் என அவர்களுக்கு உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post