மிதிகம, கங்கொட யாஹுவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு வர்த்தகரின் வீட்டிற்கு நேற்று (18) இரவு 11.30க்கும் 12.00க்கும் இடையில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இந்த சந்தேக நபர்கள் வீட்டின் வாயிலைத் திறந்து கொண்டு வளாகத்திற்குள் நுழைந்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஹோண்டா சிவில் ரக காரை முதலில் தீ வைத்து எரித்துள்ளனர். பின்னர், டி-56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி வீட்டை நோக்கி சுமார் ஐந்து முறை சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
காரில் ஏற்பட்ட தீயை வீட்டு உரிமையாளர்கள் உடனடியாக தண்ணீர் ஊற்றி அணைத்ததால், சிறிய சேதம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு காரணமாக வீட்டின் சுவர்கள், கதவு மற்றும் ஜன்னல்கள் மற்றும் காருக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், தாக்குதல் நடந்த நேரத்தில் 35 வயதுடைய வீட்டு உரிமையாளரான வர்த்தகர், அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் மற்றொரு பெரியவர் வீட்டில் இருந்தபோதிலும், யாருக்கும் உயிர் சேதமோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை.
குற்றம் நடந்த இடத்தில் இருந்து 10 உயிருள்ள தோட்டாக்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இது "மிதிகம லான்சி" என்ற பாதாள உலகக் குழுவிற்கும் சம்பந்தப்பட்ட வர்த்தகருக்கும் இடையே நிலவும் ஏதோ ஒரு தகராறு காரணமாக நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய மிதிகம பொலிஸார் மூன்று விசேட பொலிஸ் குழுக்களை நியமித்து விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.