ராகமவில் அமைந்துள்ள 'அரலிய கிஃப்ட் சென்டர்' கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களை திருடியதாகக் கூறி ஒரு பெண்ணை கொடூரமாக தாக்கி அவரது தலைமுடியை வெட்டிய சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த வன்முறையைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதுடன், பிரதான சந்தேகநபர் உட்பட ஐவர் இதுவரை சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளனர்.
இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களுக்கு உள்ளான பாதிக்கப்பட்ட பெண்ணை கண்டுபிடித்த பொலிஸ் விசாரணையாளர்கள், அவரிடமிருந்து சம்பவம் தொடர்பான தேவையான வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர். பின்னர், சம்பந்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக அவரை ராகம போதனா வைத்தியசாலைக்கு அனுப்பவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.பொலிஸார் மேற்கொண்ட விரிவான விசாரணைகளின் விளைவாக, சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான ராகம பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய பெண் ஒருவரும், மேலும் நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனைய நான்கு சந்தேகநபர்களும் 20, 21, 22 மற்றும் 23 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் ராஜாங்கனை, கடவத்தை, ராகம மற்றும் திருகோணமலை சீனக்குடா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர்கள் 2026.04.18 அன்று வெலிசர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ராகம பொலிஸாரின் வழிகாட்டலின் கீழ் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.