யாழ்ப்பாணம், பெரியவிளான் பிரதேசத்தில் காணித் தகராறு ஒன்றின் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சூனா அவர்களின் துப்பாக்கி அச்சுறுத்தலுக்கு உள்ளானதாகக் கூறப்படும் பெண் ஒருவரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்போது நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட விசேட அனுமதியின் பேரில், விளக்கமறியலில் வைக்கப்பட்ட பெண்ணின் ஒரு வயது குழந்தையும் அவருடன் தங்கியிருக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த நெருக்கடிக்கு வழிவகுத்த காணியின் எல்லைகள் மற்றும் உரிமை தொடர்பில் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அப்படியிருக்க, கடந்த 25ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் குறித்த காணியை துப்பரவு செய்யச் சென்றபோது இந்த பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் காணி தனக்குச் சொந்தமானது என்று கூறியுள்ள நிலையில், அப்போது அங்கு வந்த இரண்டு பெண்கள் காணியின் ஒரு பகுதி தங்களுக்கும் சொந்தமானது என்று கூறி பாராளுமன்ற உறுப்பினருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் குறித்த பெண்களின் உறவினரான இளைஞர் ஒருவரும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். அப்போது பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சூனா அந்த இளைஞரை காலால் உதைத்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர் தனது கையில் இருந்த பிஸ்டலை நீட்டி குறித்த பெண்ணுக்கு பகிரங்கமாக மரண அச்சுறுத்தல் விடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது தவிர, சம்பவ இடத்தில் இருந்த சட்டத்தரணி கௌசல்யா என்ற பெண், பெண்களுடன் வாக்குவாதம் செய்து அவர்களை வீடியோ எடுத்தும் உள்ளார்.
சம்பவத்திற்குப் பிறகு பாராளுமன்ற உறுப்பினர் இளவாலை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் அவர் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். எவ்வாறாயினும், பெண்ணுக்கு பகிரங்கமாக மரண அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் இளைஞரை தாக்கியமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக இதுவரை எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மேலதிகமாக தெரிவிக்கப்படுகிறது.
