இந்தியன் பிரீமியர் லீக் (IPL) உட்பட பல்வேறு சர்வதேச பிரீமியர் லீக் போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பைப் பெறுவதற்காக, தனக்கு 'எந்தவித ஆட்சேபனையும் இல்லை' என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழை (NOC) வழங்குமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு உத்தரவிடுமாறு கோரி, தேசிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவன் துஷார கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சிரேஷ்ட சட்டத்தரணி ஜி. ஜி. அருள்பிரகாசம் ஊடாக தாக்கல் செய்யப்பட்ட இந்த சட்ட மனு இன்று (02) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட பிரதிவாதிகளுக்கு நீதிமன்ற அறிவித்தல்களை வழங்குமாறு உத்தரவிட்டதுடன், மனுவை மேலதிகமாக பரிசீலனை செய்வதற்காக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 09 ஆம் திகதி மீண்டும் அழைப்பதற்கும் தீர்மானித்துள்ளது.
இந்த மனுவில் பிரதிவாதிகளாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நான்கு உயர்மட்ட அதிகாரிகளின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி, கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா, அதன் செயலாளர் பந்துல திசாநாயக்க, பொருளாளர் சுஜீவ கொடலியத்த மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.