பொல்கஹவெலவிலிருந்து தெற்கு களுத்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த மெதுவான ரயில் ஒன்று கடந்த 16ஆம் திகதி அதிகாலை வனவாசல ரயில் நிலையம் அருகே தடம் புரண்டது. போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான ஒருவர் ரயில் பாதையில் தண்டவாளங்களை மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் இரும்பு லீவர்களை அகற்றியதே இதற்குக் காரணம் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் வனவாசல ஜம்புவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவரை பேலியகொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர் அகற்றிய இரும்பு லீவர்கள் வத்தளை பிரதேசத்தில் உள்ள பழைய இரும்பு வாங்கும் இடமொன்றில் 2400 ரூபாவிற்கு விற்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றை அகற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் சந்தேகநபரின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.இந்த சந்தேகநபர் குறித்த இரும்புப் பாகங்களை 16ஆம் திகதி அதிகாலை அகற்றியுள்ளார். ரயில் விபத்து நடந்தபோது, அவர் அவற்றை விற்றுப் பெற்ற பணத்தில் மது அருந்திக் கொண்டிருந்ததும் தெரியவந்துள்ளது. விபத்துக்குள்ளான ரயில் அதிகாலை 3.25 மணியளவில் பயணத்தைத் தொடங்கி, ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் நின்று, அதிகாலை 5.20 மணியளவில் வனவாசல ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளது. அங்கிருந்து சுமார் 100 அல்லது 200 மீட்டர் தூரம் சென்றபோது, மணிக்கு 10 முதல் 15 கிலோமீட்டர் வேகத்தில் குறைந்த வேகத்தில் சென்று கொண்டிருந்தபோது இந்த தடம் புரண்ட சம்பவம் நடந்துள்ளது. இதனால் எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை. இருப்பினும், இந்த விபத்தினால் ரயில் சிக்னல் அமைப்புக்கு மட்டும் ஏற்பட்ட சேதம் சுமார் 20 லட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்திற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்னர், திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கியும், காங்கேசன்துறையிலிருந்து மொரட்டுவை நோக்கியும் பயணித்த இரண்டு அதிவேக ரயில்கள் மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் இந்த இடத்தைக் கடந்து சென்றுள்ளன. அந்த நேரத்திலும் இந்த இரும்பு லீவர்கள் அகற்றப்பட்டிருந்தன. ஒருவேளை அந்த ரயில்களில் ஒன்று தடம் புரண்டிருந்தால், அது 2001 இல் நடந்த பயங்கர ரயில் விபத்துக்கு நிகரான ஒரு பேரழிவாக இருந்திருக்கும் என்று விசாரணை அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். ரயில் பயணிக்கும்போது ஏற்படும் அதிர்வு காரணமாக, லீவர் இல்லாததால் தானாகவே தண்டவாளம் மாறியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அதன்படி, ரயிலின் எஞ்சின் பிரதான பாதையிலும், பின் பெட்டிகள் அருவக்காறு குப்பைத் தளத்திற்குச் செல்லும் துணைப் பாதையிலும் பயணித்ததால் இவ்வாறு தடம் புரண்டது.
நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள திண்மக் கழிவுகளை புத்தளம் அருவக்காறுக்கு கொண்டு செல்வதற்காக வனவாசல ரயில் நிலையம் அருகே இந்த விசேட துணைப் பாதையும் தளமும் அமைக்கப்பட்டிருந்தன. அதற்காக கொண்டுவரப்பட்ட விசேட ரயில் எஞ்சின்களும் கொள்கலன்களும் தற்போது பயணிகள் போக்குவரத்து போன்ற பிற தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டாலும், இந்த துணைப் பாதையில் ரயில் போக்குவரத்து வழக்கமாக நடைபெறுவதில்லை. பிரதான பாதையில் பயணிக்கும் ரயில் இந்தக் குப்பைத் தளத்திற்குள் நுழைய வேண்டுமானால் தண்டவாளங்களை மாற்ற வேண்டும். சந்தேகநபரால் அகற்றப்பட்டவை அந்த தண்டவாளங்களை மாற்றும் பகுதிக்குரிய இரும்பு லீவர்களே ஆகும். இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரையும், இரும்புப் பொருட்களை வாங்கிய நபரையும் கடந்த 17ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.