லக்விஜய மின் நிலையத்திற்கான நிலக்கரி கொள்முதல் செயல்முறை குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிடம் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். கடந்த மே தினக் கூட்டத்தில் அவர் ஆற்றிய சர்ச்சைக்குரிய உரை காரணமாக ஆணைக்குழு விடுத்த அழைப்பின் பேரில் அவர் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் தொடர்புடைய தரப்பினரை நிரபராதிகளாக்கி, எதிர்க்கட்சி உறுப்பினர்களை மட்டும் குற்றவாளிகளாக்க இந்த ஆணைக்குழு செயல்படும் என்று டில்வின் சில்வா மே தின மேடையில் குற்றம் சாட்டியிருந்தார். அந்த அறிக்கை ஆணைக்குழுவின் சுதந்திரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதாகவும், விசாரணை நடவடிக்கைகளில் தேவையற்ற தலையீடு என்றும் ஆணைக்குழு முடிவு செய்து, அது குறித்து விளக்கமளிக்குமாறு பொதுச் செயலாளருக்கு உத்தரவுப் பத்திரத்தை வழங்க நடவடிக்கை எடுத்தது.
அதன்படி, தனது வழக்கறிஞர்களுடன் ஆணைக்குழு முன் ஆஜரான மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர், சம்பந்தப்பட்ட சம்பவம் குறித்து விளக்கமளித்து, சத்தியக் கடதாசி மூலம் தனது வருத்தத்தை தெரிவித்தார். அவர் சமர்ப்பித்த உண்மைகளையும், மன்னிப்பு கோரியதையும் கருத்தில் கொண்ட ஆணைக்குழு, இது தொடர்பாக அவருக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்த பின்னர் விடுவிக்க முடிவு செய்துள்ளது.
இந்த விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவராக உயர் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்கவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெண்டிகே மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ சோமரத்ன ஆகியோரும் ஏனைய உறுப்பினர்களாக செயற்படுகின்றனர். இலங்கையில் நிலக்கரி மின் நிலையங்களில் மின் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், நிலக்கரி இறக்குமதியிலும், இலங்கை நிலக்கரி நிறுவனம் அல்லது அதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள் ஊடாக இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத செயல்களை கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் கடந்த ஏப்ரல் 17 ஆம் திகதி இந்த ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது.