எந்த சூழ்நிலையிலும் எதிரிகளுக்கு முன்னால் தலைவணங்கத் தயாராக இல்லை - ஈரானிய ஜனாதிபதி

not-ready-to-bow-before-enemies-under-any-circumstances---iranian-president

சர்வதேச சக்திகளுடன் நடத்தப்படும் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தையும் ஒருபோதும் 'சரணடைதல்' ஆகாது என ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் வலியுறுத்தியுள்ளார். ஈரானின் இறையாண்மை மற்றும் தேசிய உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் வலுவான நிலையில் இருந்து இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்று கூறிய அவர், தனது நிர்வாகம் எந்தச் சூழ்நிலையிலும் எதிரிகளுக்கு முன்னால் தலைவணங்கத் தயாராக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் கூற்றுப்படி, இத்தகைய பேச்சுவார்த்தைகளின் முக்கிய நோக்கம் நாட்டின் மக்களின் பாதுகாப்பையும் செழிப்பையும் உறுதிப்படுத்துவதே தவிர, பலவீனத்தை வெளிப்படுத்துவது அல்ல.




பிராந்திய அமைதியின்மையைத் தணிப்பதற்காக அமெரிக்கா முன்வைத்த திட்டங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக ஈரான் 14 அம்ச புதிய திட்டத்தை முன்வைத்த பின்னணியில் இந்த நிலைப்பாடு வெளியிடப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத் வழியாக அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டுள்ள இந்தத் திட்ட முன்மொழிவு மூன்று கட்டங்களைக் கொண்டதுடன், அதன் முதல் கட்டமாக 30 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் முன்மொழியப்பட்டுள்ளது. அமெரிக்கா முன்னர் முன்வைத்த 9 அம்ச திட்டத்திற்கு இது ஒரு எதிர்-திட்டமாக முன்வைக்கப்பட்டுள்ளதுடன், பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவருவதே ஈரானின் இறுதி இலக்காகும்.

ஈரான் முன்வைத்துள்ள இந்த புதிய வரைவு, அமெரிக்காவிற்கு பல கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது ஒரு சிறப்பம்சமாகும். ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்குதல், ஈரானிய துறைமுகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்குதல் மற்றும் பிராந்தியத்தில் இருந்து அமெரிக்கப் படைகளை விலக்கிக் கொள்ளுதல் ஆகியவை இதில் முக்கியமானவை. லெபனானில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் உட்பட இஸ்ரேலின் அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும் என்றும் ஈரான் கோருகிறது. இதற்கு ஈடாக, ஈரானிய அணுசக்தி திட்டம் தொடர்பான முந்தைய நிலைக்குத் திரும்புவதற்கும், மூலோபாய கடல் வழிகளில் வர்த்தக நடவடிக்கைகளுக்கு முழு வாய்ப்பை வழங்குவதற்கும் ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது.




எவ்வாறாயினும், இந்த இராஜதந்திர முயற்சிகளுக்கு மத்தியில் பிராந்திய கடல் எல்லைகளில் போர் பதற்றம் மேலும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஹோர்முஸ் நீரிணை மற்றும் கட்டார் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் சரக்குக் கப்பல்கள் தாக்கப்பட்டதாகப் பதிவாகியுள்ளதுடன், ஈரானிய பாராளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு குழு, தனது நாடு இதுவரை பின்பற்றிய 'கட்டுப்பாட்டுக் கொள்கை' முடிவுக்கு வந்துவிட்டதாக எச்சரித்துள்ளது. அமெரிக்கப் போர் விமானங்கள் ஈரானியக் கப்பல்களைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், எதிர்காலத்தில் அமெரிக்கக் கப்பல்கள் அல்லது இராணுவத் தளங்களை இலக்காகக் கொண்டு கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என்று ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையும் எச்சரித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post