
ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்காக ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (12) முற்பகல் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார். இன்று காலை 9.30 மணியளவில் ஆணைக்குழுவிற்கு வருகை தந்த அவர், சுமார் இரண்டு மணித்தியாலங்கள் விசாரணை அதிகாரிகளுக்கு விளக்கமளித்த பின்னர் முற்பகல் 11.50 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டார்.
முன்னாள் ஜனாதிபதி இலஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலையான சந்தர்ப்பத்தில், அவருக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பல கட்சி உறுப்பினர்களும் அங்கு வந்திருந்தனர்.இந்த விசாரணையின் அடிப்படை, 2013 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் ஆறு ஏர்பஸ் A-330 ரக விமானங்களையும் எட்டு ஏர்பஸ் A-350 ரக விமானங்களையும் கொள்வனவு செய்த செயல்முறையாகும். இந்த கொடுக்கல்வாங்கலின் போது இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலஞ்சமாகப் பெறப்பட்டதாக, அந்த நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி, காலஞ்சென்ற கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி நியோமாலி விஜேநாயக்க ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. இந்த சம்பவம் தொடர்பாக இலஞ்சச் சட்டம் மற்றும் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இலஞ்ச ஆணைக்குழு கடந்த மார்ச் 12 ஆம் திகதி கபில சந்திரசேனவை மீண்டும் கைது செய்தது.
சம்பந்தப்பட்ட கைதுக்குப் பின்னர் நீதிமன்றத்திற்கு தகவல்களை வழங்கிய இலஞ்ச ஆணைக்குழு, தனக்கு கிடைத்த இரண்டு மில்லியன் டொலர் இலஞ்சப் பணத்தில் 20 மில்லியன் ரூபாவை அப்போதைய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்த பியங்கர ஜயரத்னவிற்கும், 60 மில்லியன் ரூபாவை மூன்று சந்தர்ப்பங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் வழங்கியதாக கபில சந்திரசேன ஆணைக்குழுவிடம் தெரிவித்ததாகக் கூறியது. அந்த வாக்குமூலங்களின் உண்மைத்தன்மையை விசாரிக்கும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி இன்று ஆணைக்குழுவில் அழைக்கப்பட்டு இருந்தார், அத்துடன் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவும் இன்று இலஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தார். மேலும், இந்த ஏர்பஸ் கொடுக்கல்வாங்கல் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக தென் மாகாண முன்னாள் ஆளுநர் வில்லி கமகேவும் நேற்று இலஞ்ச ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
எவ்வாறாயினும், இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிகள் தமக்கு அச்சுறுத்தி பலவந்தமாக குறித்த வாக்குமூலத்தைப் பெற்றதாகக் குறிப்பிட்டு, கபில சந்திரசேனவின் சட்டத்தரணிகள் இதற்கு முன்னர் நீதிமன்றத்தில் சத்தியக்கடதாசி ஒன்றையும் சமர்ப்பித்திருந்தனர். இவ்வாறான சர்ச்சைக்குரிய பின்னணியில், கடந்த வெள்ளிக்கிழமை கபில சந்திரசேனவின் சடலம் ஒரு வீட்டிற்குள் சந்தேகத்திற்கிடமான முறையில் கண்டெடுக்கப்பட்டது.