இரத்மலானை சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள அதி உயர் பாதுகாப்பு வலயமாகும் அத்திடிய பிரதேசத்தில் சுற்றுலா நிறுவனத்தின் போர்வையில் நடத்தப்பட்டு வந்த சட்டவிரோத தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலிபரப்பு நிலையம் ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். கல்கிசை பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இணைந்து மேற்கொண்ட இந்த சுற்றிவளைப்பின் போது, குறித்த நிலையத்தை இயக்கி வந்த ஐம்பத்தைந்து வயதுடைய மாலைதீவு பிரஜை ஒருவரையும் மற்றுமொரு சந்தேக நபரையும் அதிகாரிகள் கைது செய்ய முடிந்தது.
சந்தேகநபர்கள் தனியார் தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனத்தின் தரவுகளைப் பயன்படுத்தி செய்மதி தொழில்நுட்பம் மூலம் தொலைக்காட்சி அலைவரிசைகளை பதிவிறக்கம் செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பின்னர் வாடிக்கையாளர்களின் தேவைகளின் அடிப்படையில், குறித்த தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவைகளை இலங்கையிலும் சர்வதேசத்திலும் சட்டவிரோதமாக மீள் விநியோகிக்கும் மோசடி ஒன்று இந்த இடத்தில் இரகசியமாக செயற்படுத்தப்பட்டுள்ளது. களுபோவில பிரதேசத்தில் வசித்து வந்த பிரதான சந்தேகநபரான மாலைதீவு பிரஜையினால் இந்த அனைத்து நடவடிக்கைகளும் வழிநடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்துகின்றனர்.
கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் பெறப்பட்ட தேடுதல் பிடியாணைக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட இந்த தேடுதலின் போது, சுமார் ஐந்து கோடி ரூபா பெறுமதியான தொலைத்தொடர்பு உபகரணங்கள் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் எட்டு அடி உயரமான செய்மதி உபகரண தாங்கி ஒன்று, பயன்படுத்தப்பட்ட பத்து செய்மதி ரிசீவர்கள் மற்றும் பயன்படுத்தப்படாத நான்கு ரிசீவர்கள், பெரிய அளவிலான ஐந்து செய்மதி டிஷ்கள், பதினாறு செய்மதி வெற்றுப் பெட்டிகள், மூன்று கணினிகள், ஒரு ஸ்டார்லிங்க் (Starlink) அலகு மற்றும் ஒரு பெரிய தொலைக்காட்சி இயந்திரமும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டவிரோத நிலையம் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் நடத்தப்படுவதும் வெளிநாட்டவர்களால் இயக்கப்படுவதும் காரணமாக, இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையுமா என்பது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஐ.எஸ்.ஐ.எஸ். உட்பட ஏதேனும் பயங்கரவாத அமைப்புடன் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பதை கண்டறியும் பொருட்டு, கல்கிசை பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் நிலந்த கமகே அவர்களின் தலைமையில் ஒரு விசேட பொலிஸ் குழுவினால் தற்போது விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.