
2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் தற்காலிக, சாதாரண அல்லது ஒப்பந்த அடிப்படையில் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட சுமார் பத்தாயிரம் ஊழியர்களுக்கு இந்த மாதம் நிரந்தர நியமனங்கள் வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இந்த புதிய நியமன செயல்முறை தொடர்பாக, அரச நிர்வாக அமைச்சு ஏற்கனவே அமைச்சுகள், மாகாண சபைகள், அரச திணைக்களங்கள் மற்றும் சட்டரீதியான சபைகளுக்கு ஒரு விசேட சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் நிலவிய கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த ஊழியர்களின் வேலைகளை நிரந்தரமாக்க அரசாங்கத்தால் முடியவில்லை. இருப்பினும், தற்போது பொருளாதார நிலைமை படிப்படியாக மேம்பட்டு வருவதால், அவர்களை நிரந்தர அரச சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சம்பந்தப்பட்ட அமைச்சின் சுற்றறிக்கை எதிர்கால ஆட்சேர்ப்புகளை ஒழுங்குபடுத்துவதற்கும் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதுடன், அதற்கமைய அத்தியாவசிய தகுதிகளை பூர்த்தி செய்யாத எவரையும் எதிர்காலத்தில் அரச சேவையில் இணைத்துக்கொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அந்தந்த நிறுவனங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கையை மீறி புதிய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ளாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் இந்த அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை மீறி செயல்பட்டால், அதற்குப் பொறுப்பான அதிகாரி அல்லது உத்தியோகத்தர் தனிப்பட்ட முறையில் பொறுப்பாவார் என்றும் அந்த சுற்றறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.